பிரிட்டனின் கொவென்ரி நகரில் பறக்கும் கார்களுக்கான விமான நிலையம் தயாராகிறது.
பறக்கும் கார்கள், டிரோன் எனப்படும் காற்றாடி விமானங்கள் ஆகியவைகளுக்கான ஒரு விமான நிலையம் கொவென்ரி நகரில் தயாராகி வருகிறது. இதுபோன்ற சிறிய பறக்கும் கருவிகளுக்கான உலகத்திலேயே முதலாவது விமான நிலையமாக இது இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
பறக்கும் கார்கள் தொழில்நுட்பம், தயாரிப்பு என்பவை ஏற்கனவே நிஜமாகியிருந்தாலும் பாவிக்கு இன்னும் வழமையாகவில்லை. வெவ்வேறு நகரங்களும், நிறுவனங்களும் இப்படியான கருவிகளை மிக விரைவில் சந்தைப்படுத்தப்போவதாக அறிவித்திருக்கின்றன.
கொவென்ரியில் இந்த விமான நிலையத்தைத் தயார்ப்படுத்தும் ஏர்பன் ஏர்போர்ட் நிறுவனம் அந்த நகரம் ஐக்கிய ராச்சியத்தின் மையத்தில் இருப்பதாலும், ஏற்கனவே விமானங்கள், கார்கள் போன்றவைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் கொண்டிருப்பதாலும் அதைத் தெரிவுசெய்ததாகக் குறிப்பிடுகிறது. அத்துடன் அந்த நகரையொட்டி அத்தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்கள் கிடைப்பதும், நான்கே மணிகளில் நாட்டின் எந்தப் பாகத்தையும் அடையக்கூடிய வசதியையும் கொண்டிருப்பதும் சாதகமானது.
விமான நிலையத்துக்காக அரசு 1.2 மில்லியன் பவுண்டுகளை முதலீடு செய்ய அதற்கிணையான தொகையை ஹையுண்டாய் நிறுவனமும் தன் பங்காக முதலீடு செய்திருக்கிறது. இவ்வருடம் நவம்பர் மாதத்தில் விமான நிலையம் மக்கள் பார்வைக்குத் தயாராக இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்