நைஜீரியாவில் சுற்றுப்புற சூழலை நாசம் செய்த ஷெல் நிறுவனம் நஷ்ட ஈடு கொடுக்க டச் உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நைஜீரியாவிலிருக்கும் நைகர் கழிமுகத்திடல் பிராந்தியத்தில் 2007 – 2008 காலகட்டத்தில் ஏற்பட்ட எரிநெய்க் கசிவுகளால் சுற்றுப்பிராந்தியத்திலிருக்கும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக் காரணம் ஷெல் நிறுவனத்தின் நைஜீரியச் சகோதர நிறுவனமே என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றிய வழக்கை நெதர்லாந்தில் Friends of Earth என்ற அமைப்பினர் நைஜீரியாவில் அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், குடிகள் சார்பாக எழுப்பியிருந்தார்கள்.
2013 இலேயே கீழ்மட்ட நீதிமன்றமொன்று ஷெல் – நைஜீரியா தான் எரிநெய்க் கசிவுகளுக்குக் காரணமென்று தீர்ப்பளித்திருந்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்றதில் அக்கசிவுகளுக்குக் காரணமான நிறுவனம் மிகப்பெரிய தொகையொன்றை அந்தப் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட எண்ணெய்க் குழாய்களை வேண்டுமென்றே யாரோ உடைத்ததனால்தான் எரிநெய் கசிந்ததாகவும் அதனால் அதன் பொறுப்பு தமக்கல்லவென்றும் ஷெல் – நைஜீரியா வாதாடியதை ஏற்காத நெதர்லாந்து நீதிமன்றம் அங்கே வாழும் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்