நாஸிகளுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 96 வயது மாது விசாரணைக்கு வராமல் ஒளித்தோடிக் கண்டுபிடிக்கப்பட்டார்.
75 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் நாஸிக் கொலைகாரர்களுக்குக் காரியதரிசியாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வியாழனன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட இருந்த மாது ஒளித்தோடிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அவர் ஹம்பேர்க்குக்கு அருகே முதியவர் இல்லமொன்றில் வசித்து வருகிறார். வியாழனன்று காலையில் கட்டண வாகனமொன்றை வரவழைத்து அதில் எங்கோ போய்விட்டார். அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலைக்களத்தின் தலைமை அதிகாரியின் காரியதரிசியாகத் தனது 18 – 19 வயதில் பணிபுரிந்ததாகக் குறிப்பிடப்படும் அந்த மாதுவின் பெயர் Irmgard Furchner என்று பல ஊடகங்கள் அடையாளப்படுத்துகின்றன. குற்றஞ்செய்த சமயத்தில் அவரது வயது 21 க்குக் குறைவாக இருந்ததால் அவரை “இளையவர்கள்” நீதிமன்றத்தில் விசாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
நீதிமன்ற விசாரனையில் அந்த மாது தான் நாஸி அதிகாரிகளுக்கு உதவியாளராகச் செயற்பட்டபோது அவர்கள் செய்த குற்றங்கள் பற்றிய அறிவுடன் இருந்தாரா என்பது பற்றி முக்கியமாக விசாரிக்கப்படவிருந்தது. நாஸி உதவியாளர்களாக இருந்ததாக இத்தனை [96] முதியவர் எவரும் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
1940 – 1945 கால நாஸிக் கொலைகள் நடாத்தப்பட்ட முகாம்களில் சுமார் 4,000 பெண்கள் பணியாளர்களாக இருந்தார்கள். அவர்களில் மிகச் சிலரே நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். பெண் உத்தியோகத்தர்களில் உயர்ந்த பதவியிலிருந்தவர் மரியா மண்டல் என்பவராகும். “கொடூரமான மிருகம்” என்ற பட்டப்பெயரில் குறிப்பிடப்படும் மரியா மண்டெல் 1948 இல் தனது குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
ஒளித்தோடிக் கண்டுபிடிக்கப்பட்ட மாதுவை மருத்துவ பரிசோதனை செய்தபின் நீதிமன்றத்தில் நிறுத்துவது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்