இளவயதில் நாஸி முகாமில் வேலை – 77 வருடங்களுக்குப் பின்னர் தண்டனை கிடைத்தது.

ஸ்டுட்ஹோவ்  நகரில் 77 வருடங்களுக்கு முன்னர் நாஸிகளால் நடத்தப்பட்ட முகாமில் பல்லாயிரக்கணக்கானோரைக் கொலைசெய்யும் பணியில் உடந்தையாக இருந்த Irmgard Furchner க்கு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது. நிபந்தனைகளுடனான இரண்டு வருடத் தண்டனை அந்த 97 வயதான மாதுவுக்கு வழங்கப்பட்டது. குற்றஞ்செய்த காலத்தில் அவர் இளவயதினராக இருந்ததால் அந்த வயதினருக்கான நீதிமன்றத்திலேயே அவர் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒக்டோபர் 2021 இல் பர்ச்னர் மீதான நீதிமன்ற விசாரணை ஆரம்பித்தபோது அவர் ஓடி ஒளித்துவிட்டார். சில மணி நேரத் தேடலின் பின்னர் பக்கத்து நகரில் கைதுசெய்யப்பட்டார். தான் உடந்தையாக இருந்த குற்றங்களை மறுத்து, மன்னிப்புக் கோரவும் அவர் நீண்ட காலமாக மறுத்துவந்தார். கடைசியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அவர் தான் சேர்ந்து செய்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் சமூகத்தினரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்துக் குற்றங்களுக்காக ஒருவர் இந்த நூற்றாண்டில் தண்டிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். அக்காலத்தில் நடந்த  யூத அழிப்புக்காக இறுதியாகத் தண்டனைக்கு உள்ளாபவர் இந்த மூதாட்டியே என்று ஜெர்மனிய அரச வழக்கறிஞர்கள் கருதுகிறார்கள். காரணம் அக்குற்றவாளிகளில் பெரும்பாலானோர் இறந்துவிட்டார்கள், அல்லது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *