“இனவாதம் என்பது தோலின் நிறத்தைப் பற்றி மட்டுமில்லாமல் பல ரூபங்களில் இருக்கிறது.”

ஏ.பி.சி தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியான “தெ வியூ”- வை நடத்திவந்த பிரபல நட்சத்திரம் வூப்பி கோல்ட்பெர்க் யூதர்கள் அழிப்பு பற்றித் தவறான கருத்தைச் சொன்னதால் இரண்டு வாரங்கள் வீட்டுக்கனுப்பப்பட்டிருக்கிறார். “தீங்கான, தவறான கருத்துக்கள்,” என்று அவரது கருத்துக்களைக் கண்டித்த தொலைக்காட்சி நிறுவனம் தாம் யூத சமூகத்தினருடனும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், நண்பர்களுடனும் சேர்ந்து வேதனைக்கு உட்பட்டதாக மன்னிப்புத் தெரிவித்தது.

“யூத அழிப்பு என்பது இனப்பிரச்சினை அல்ல. அது மனிதர்கள் மற்றவர்களுடன் மனிதாபிமானமின்றி மற்றவர்களைக் கையாண்டதேயாகும். அது வெள்ளையினத்தவர், வெள்ளை இனத்தினருக்கு எதிராகச் செய்த கொடுமைகள். அதனால், நீங்கள் உங்களுக்குள்ளேயே அடிபட்டுக்கொள்கிறீர்கள்” என்று தனது நிகழ்ச்சியில் கோல்ட்பெர்க் குறிப்பிட்டார். 

நிகழ்ச்சியின் பின்னர் சில மணி நேரங்களின் பின்னர் கோல்ட்பெர்க் தனது கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆயினும் உலகம் முழுவதிலிருந்தும் அவரது கருத்துக்கு எதிராகப் பெருமளவில் எதிர்ப்பு எழுப்பப்பட்டது. 

racism என்பதற்கான உள்ளீடு சமீப வருடங்களில் பெருமளவில் மாறியிருக்கிறது. சரித்திரத்தில் குறிப்பிட்ட ஒரு குழுவினர் இன்னொரு குழுவினர் தம்மை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்துடன் கீழ்ப்படுத்துவது, ஒழித்துக்கட்டுவது, தாழ்த்துவது என்று பல விதங்களிலும் அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்தும் அதேபோலவே உலகில் காணப்படுகிறது. எனவே, அதை கறுப்பு இனத்தவருக்கு எதிரானது என்று மட்டும் மட்டுப்படுத்த இயலாது. என்று பல துறையைச் சேர்ந்தவர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

யூதர்கள் மதத்தால் அடையாளப்படுத்தப்படுவதில்லை. அவர்கள் குறிப்பிட்ட இனமாகவே அடையாளப்படுத்தப்படுகிறார்கள். நாஸிகளின் இன அழிப்பு என்பது அவர்களுடைய கோட்பாடாக முன்னெடுக்கப்பட்டது. எனவே அதை வெள்ளையர்களுக்கு இடையேயான மோதல் என்று கட்டுப்படுத்த முடியாது.

“வூப்பி கோல்ட்பெர்க் தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலும் அவர் இரண்டு வாரம் ஓய்வெடுத்துக்கொண்டு தனது சிந்தனைகளைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்,” என்று ஏ.பி.சி நிறுவன நிர்வாகி குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்