பீஜிங்கில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் ஒரேயொரு இந்தியர் ஆரிப் கான்.

பெப்ரவரி நாலாம் திகதி ஆரம்பிக்கவிருக்கிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள். இம்மாதம் 20 திகதி வரை தொடரவிருக்கும் அந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள் குவிந்திருக்கிறார்கள். 1. 4 பில்லியன் மக்கள் தொகையுள்ள இந்தியாவிலிருந்து பங்குபற்றுகிறவர் ஒரேயொருவர் தான். 31 வயதான ஆரிப் முஹம்மது கான் தான் அவர்.

இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருக்கும் காஷ்மீரில் குல்மார்க் எனப்படும் பனிப்பிரதேசத்தில் பிறந்து நாலு வயதிலேயே காலில் பனிச்சறுக்கல் மட்டைகளைப் பூட்டிக்கொண்டு வளர்ந்தவர் ஆரிப் கான். பனிக்கால விளையாட்டுகளுக்கான உலகின் மிக உயரமான இடங்களொன்றில் இருக்கும் குல்மார்க்கில் ஆரிப் கானின் தந்தையார் பனிக்கால விளையாட்டுக்களுக்கான உபகரணங்களை விற்கும் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார். 

பாகிஸ்தான் – இந்திய எல்லையிலிருக்கும் ஓரிரு கி.மீ தூரத்திலிருக்கும் அப்பகுதியை ஹெலிகொப்டர் மூலம் மட்டுமே அடையலாம். தனது 12 வயதிலேயே பனிச்சறுக்கலில் தேசிய விருதை வென்றிருக்கிறார் ஆரிப் கான். பிறந்து வளர்ந்த இடத்தில் பயிற்சிக்குத் தேவையான அளவு வெண்பனி எப்போதும் கிடைப்பதாலும், உபகரணங்கள் குடும்ப வியாபாரத்திலிருந்தே கிடைப்பதாலும் ஆரிப் கானுக்குப் பனிச்சறுக்கல் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் கிடைத்தன.

போட்டிக்கான பயிற்சிகள், வெவ்வேறு விதமான பனி, உயரங்கள் போன்றவைகளில் ஈடுபடுவதற்கான வசதிகள் கிடைப்பது தனக்கு அரிதாக இருக்கிறது என்கிறார் ஆரிப் கான். ஐரோப்பாவின் வெவ்வேறு பனி வாசஸ்தலங்களுக்கும் சென்று வெவ்வேறு வீரர்களுடன் சேர்ந்து போட்டிப் பயிற்சிகள் செய்வதற்கான செலவுகளை அவரது நண்பர்களும், உறவினர்களுமே செய்ததாக அவர் குறிப்பிடுகிறார். இந்தியாவில் அவர் பங்குபற்றும் விளையாட்டில் பலர் பங்குபற்றுவதில்லை என்பது ஒரு பலவீனம். அரசும் அதற்கான உதவிகளைச் செய்வதில்லை என்று அவர் மனம் வருந்துகிறார்.

“எங்கள் நாட்டில் 1.4 பில்லியன் மக்கள் இருப்பதால் எப்படியும் சிலர் என்னையும் உற்சாகப்படுத்துவார்கள். எதிர்காலத்தில் இந்த விளையாட்டிலும் பலர் ஈடுபடவேண்டும் என்பதற்காக நான் இதை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்,” என்று குறிப்பிடும் ஆரிப் கான் தான் போட்டியிடும் விளையாட்டில் தங்கப் பதக்கம் எடுக்கவேண்டும் என்று குறியுடன் இருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்