இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாக எட்டு இந்திய மாஜி கடற்படை வீரர்கள் கத்தாரில் கைது.

ஆகஸ்ட் 30 ம் திகதி உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கத்தாரில் எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கத்தாரில் Dahra Global Technologies and Consultancy Services என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தனர். அது கத்தாரின் கடற்படையினருக்குப் பயிற்சி கொடுக்கும் நிறுவனமாகும்.

கைது செய்யப்பட்டிருப்பவர்களில் ஒருவர் ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படைத் தளபதி புர்னேந்து திவாரி என்பவராகும். அவர் Dahra Global Technologies and Consultancy Services நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவி வகித்தார். கைது செய்யப்பட்டிருப்பவர்கள் எல்லோரும் தனித்தனியாகவே காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களை செப்டெம்பர் மாத்தில் தான் முதல் தடவையாகத் தமது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள கத்தார் அனுமதித்தது. அதன் பின்னர் ஒக்டோபர் மாதத்தில் அவர்களுக்கு இந்தியத் தூதராலயத்துடன் தொடர்பு கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கத்தாருடன் கொண்டிருக்கும் தொடர்புகளின் மூலம் கைது செய்யப்பட்டிருக்கும் இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகளை எடுத்து வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ராயேலின் ஊடகச் செய்திகள் இந்தியப் பாதுகாப்புச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற குறிப்பிட்ட உத்தியோகத்தர்கள் இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *