பிரான்ஸ், ஜேர்மனியின் கடும் விமர்சனக்கணைகளை இத்தாலி உதாசீனம் செய்ததால் அகதிகள் கப்பல் பிரான்ஸுக்குச் செல்கிறது.

இத்தாலிக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று வாக்குறுதி கொடுத்துத் தேர்தலில் வெற்றிபெற்ற வலதுசாரிகள் – தேசியவாதிகளின் கூட்டணி அரசு மத்தியதரைக் கடலில் காப்பாற்றப்பட்டவர்களை நாட்டுக்குள் விட ஒரு வார காலமாக மறுத்து வருகிறது. சக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி ஆகியோரின் வேண்டுகோள், விமர்சனம் எதையுமே கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டார் பிரதமர் ஜோர்ஜியா மெலோனி. 

சுமார் 1,000 அகதிகளை உடைந்த கப்பல்களிலிருந்து காப்பாற்றிக்கொண்டு மனித உரிமை அமைப்புகளின் மூன்று கப்பல்கள் மால்டா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளின் துறைமுகங்களில் இறக்க ஒரு வாரத்துக்கும் அதிகமாகக் கடலிலேயே காத்திருந்தன. சக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐ.நா ஆகியோரின் இத்தாலிய அரசுக்குப் பெரும் அழுத்தம் கொடுத்த பின்னர் அக்கப்பல்களிலிருந்த கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், குழந்தைகளுடனான பெண்கள் ஆகியோரை மட்டும் தனது துறைமுகத்தில் இறக்க இத்தாலி அனுமதித்தது. மிச்சப்பேரைத் துறைமுகத்திலிருந்து துரத்திவிட்டது இத்தாலி.

“மற்றைய நாடுகள் தம்மிடம் வர அனுமதிக்காத அகதிகளை எதற்காக இத்தாலி மட்டும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.நாங்கள் இவ்வருடத்தில் மட்டும் ஏற்கனவே 90,000 பேரை எங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதித்திருக்கிறோம்,”  என்று இத்தாலியின் உள்துறை அமைச்சர் மத்தியோ பியாந்தடோஸி தனது அரசின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். தமது நாடு அகதிகளுக்கான அடிப்படை உதவிகளைக் கொடுப்பதில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

234 அகதிகளுடன் Ocean Viking என்ற கப்பல் ஒரு வழியாகப் பிரான்சின் Toulon துறைமுகத்தில் வந்து அவர்களை அங்கே இறக்கியதாகப் பிரான்ஸ் வெள்ளியன்று தெரிவித்தது. கப்பலில் கடும் சுகவீனத்துடன் இருந்த நால்வர் ஏற்கனவே கோர்சிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கப்பலில் சுமார் 50 குழந்தைகளும் இருந்ததாகப் பிரான்ஸ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *