அணுமின்சார உலைகளைக் கட்டப்போகும் இன்னொரு நாடு பிரான்ஸ்.

எரிநெய் விலையுயர்வும், மின்சாரத் தட்டுப்பாடும் சேர்ந்து பிரான்ஸையும் “மீண்டும் அணுமின்சார உலைகள்” என்ற வழிக்குத் திருப்பியிருக்கின்றன. அத்துடன் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் அதிவேக நடவடிக்கையான கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்கும் மலிவான சக்தியாக அணுமின்சார உலைகள் நோக்கப்படுகின்றன.

“அடுத்தவரில் தங்கியிராமல் சொந்தமாக எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளவும், 2050 இல் கரியமிலவாயு வெளியேற்றலைச் சமப்படுத்தும் குறிக்கோளை எட்டவும் நாம் நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் அணுமின்சாரத்தை உபயோகிக்கவிருக்கிறோம்,” என்று ஜனாதிபதி மக்ரோன் அதுபற்றிய தனது விளக்கத்தைத் தெரிவித்தார்.

மிகப் பெருமளவில் தங்கள் மின்சாரத்துக்காக அணுசக்தியைப் பாவிக்கும் நாடுகளில் முதன்மையான ஒன்றாக பிரான்ஸ் இருந்து வருகிறது. நாட்டின் மின்சாரத்தேவையில் 70 விகிதத்தை நாட்டிலிருக்கும் 56 அணுமின்சார நிலையங்களே பூர்த்தி செய்கின்றன. மேலும் கட்டப்படவிருக்கும் அணுமின்சார நிலையங்கள் பற்றிய விபரங்கள் வரவிருக்கும் வாரங்களில் வெளியிடப்படும்.

பிரான்ஸில் தற்போது செயற்படும் அணுமின்சார உலைகள் 1980 – 1990 களில் கட்டப்பட்டவை. அவைகளின் பாவிப்பைக் குறைத்து 2035 இல் நாட்டின் 50 விகித மின்சாரத்துக்கே அவற்றைப் பாவிப்பது என்றும் படிப்படியாக அவைகளைத் தவிர்த்து இயற்கை வளங்களிலிருந்து பெறப்படும் சக்தியை நோக்கி நாடுவது என்பதும் பிரான்ஸின் திட்டமாக இருந்தது. அந்த வழியிலிருந்து மாறவே பிரான்ஸ் இப்போது திட்டமிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்