கடந்த சுமார் ஆறு மாதங்களில் துறைமுகங்களில் காத்திருந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு சிறீலங்கா அரசு கட்டிய தண்டத்தொகை 10 மில்லியன் டொலர்கள்.

கடந்த சுமார் ஒரு வருட காலமாக கையிருப்பில் போதிய அன்னியச் செலாவணி இல்லாமையால் சிறீலங்கா அரசு திக்குமுக்காடுவது உலகமறிந்த விடயமாகும். அதன் விளைவால் நாட்டில் ஏற்பட்ட அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், சமூகம் மீதான தாக்கங்கள் தொடர்ந்தும் தீர்ந்தபாடில்லை. டொலர்கள் இல்லாததால் தவிக்கும் அதே சமயம் அரசு நாட்டின் துறைமுகங்களில் வந்து காத்து நின்ற எண்ணெய்க் கப்பல்களுக்கான தண்டமாக மட்டும் 10 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையைச் செலுத்தியிருக்கிறது.

இறக்குமதியால் மட்டுமே கிடைக்கும் பெற்றோலியப் பொருட்களுக்கு அவைகள் துறைமுகத்துக்கு வரமுதலேயே அதற்கான விலையைக் கொடுத்துவிடுவது வர்த்தக மரபு. அதைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், சிறீலங்கா அரசின் கஜானா வரட்சியைப் பற்றி அறிந்துகொண்ட நிறுவனங்கள் அப்பணம் தமது வரவில் வைக்கப்படும்வரை துறைமுகத்தில் காத்திருக்கும்படி சொல்லிவிடுகின்றன. விலை டொலரில் செலுத்தப்பட்ட பின்னரே பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்றவை துறைமுகத்தின் கொள்கலங்களுக்குத் திறந்துவிடப்படும். 

துறைமுகமொன்றில் காத்திருக்கும் கப்பல்கள் அத்துறைமுகங்களுக்கும், தமது கப்பல்களின் உரிமையாளர்களுக்கும் தாமதத்துக்கான தண்டப்பணம் கொடுக்கவேண்டும். அதை அவை தாம் யாருக்காகக் குறிப்பிட்ட பண்டத்தைக் கொண்டுவந்தார்களோ அவர்களிடமிருந்தே அறவிடுவார்கள். அவ்வகையிலேயே சிறீலங்கா அரசு தான் கொள்வனவு செய்ய பெற்றோலியப் பொருட்களுக்குச் சரியான சமயத்தில் விலை கொடுக்கத் தவறியதன் தாமதமாகப் சுமார் 10 மில்லியனுக்கும் அதிக தொகையைத் தண்டமாகச் செலுத்தியிருப்பதாக எரிபொருள் துறைக்கான அமைச்சர் டி.வி சணக தெரிவித்தார்.

இதுபோன்ற தாமதத்தையும், தண்டத்தையும் தவிர்க்கக்கூடிய வழியொன்றைத் தான் பரிசீலித்து அதை ஏற்றுக்கொள்ளும்படி அரசிடம் விபரங்களை அனுப்பியிருப்பதாகவும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இதே போன்று எதிர்காலத்தில் தண்டப்பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நாட்டின் தேவைக்கான பெற்றோலியப் பொருட்கள் தொடர்ந்தும் சிறீலங்காவில் கிடைப்பதில்லை. அன்னியச் செலாவணித் தட்டுப்பாடும் டொடர்கிறது. எனவே, தொடர்ந்தும் சிறிலங்காவில் பெற்றோலியப் பொருட்கள் கட்டுப்பாடுகளுடனேயே விற்கப்படுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *