ஐரோப்பிய நாடுகளின் திரவ எரிவாயு வேட்டை, காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் மோசமாக்குகின்றன.

ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவைக் குளாய்கள் மூலம் கொள்வனவு செய்துவந்த ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவைத் தண்டிப்பதற்காக அக்கொள்வனவை நிறுத்திவிட்டு வெவ்வேறு கண்டங்களிலிருந்து கப்பல் கொள்தாங்கிகள் மூலம் திரவ எரிவாயுவை இறக்குமதி செய்ய ஆரம்பித்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் துறைமுகங்களில் அந்த எரிவாயுவைத் தேக்கும் கொள்கலங்களாலான மையங்களும் படுவேகமாகக் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் உலகக் காலநிலை மேலும் வெப்பமடைவதற்கான வழிகளை உண்டாக்குகின்றன என்கிறது Climate Action Tracker ஆராய்ச்சியாளர்கள் அமைப்பு. 

2015 இல் பாரிஸ் நகரில் நடந்த ஐ.நா -வின் காலநிலை மாநாட்டில் முடிவு செய்யப்பட்டபடி உலகின் வெப்பநிலை அதிகரிப்பு 1.5 செல்சியசுக்கு அதிகமாகாமல் கட்டுப்படுத்துவது ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு வேட்டையால் முடியாமல் போகும் என்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள் தமது அறிக்கையில். ஐரோப்பிய நாடுகள் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருக்கும் எரிவாயுவின் அளவானது அவர்கள் முன்பு ரஷ்யாவிடம் கொள்வனவு செய்த எரிவாயுவைவிட மிக அதிகமானதாகும்.

உலகின் வெப்பநிலை உயர்வானது உலகம் தொழிற்சாலைகள் யுகத்தைச் சந்திப்பதற்கு முன்னரை விட 2.4 செல்சியஸ் அதிகமானதாகும் என்று cop27 இல் வியாழனன்று விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கை மூலம் தெரியவருகிறது. அதைக் குறைத்து 1.5 செல்சியசுக்கு அதிகப்படாமல் பார்த்துக்கொள்வதற்குப் பதிலாக உலக நாடுகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகளால் அது 2.7 செல்சியஸ் அதிகமாகும் நிலையை எதிர்நோக்கி நகர்வதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *