தெற்கில் தாக்குதல்கள் நடத்துவதாக அறிவித்தது ரஷ்யர்களை ஏமாற்றவே, என்று தெரிவிக்கிறது உக்ரேன்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரஷ்ய இராணுவம் கைப்பற்றிய உக்ரேனின் தெற்கிலுள்ள சில நகரங்களை மீட்கப் பதிலடிப்போர் ஆரம்பித்திருப்பதாக உக்ரேன் இராணுவம் அறிவித்திருந்தது. மேலதிகள் விபரங்களை வெளியிடாமல் அப்பகுதிகளில் பத்திரிகையாளர்களை நுழையவிடாமல் மறித்திருந்தது. அதன் காரணம் சார்க்கிவ் நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மீட்டெடுக்க  உக்ரேன் இராணுவம் திட்டமிட்டிருந்ததே என்று உக்ரேனின் ஜனாதிபதி தெரிவித்தார்.

ரஷ்ய இராணுவத்தினரின் கவனத்தை வேறு பக்கத்தை நோக்கித் திருப்பிவிட்டு சார்க்கிவ் நகரையும் அதைச் சுற்றியும் உள்ள, ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளைத் தாக்கிப் போரிடவே கேர்சன் நகர் உட்பட்ட தென் உக்ரேன் பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தாம் அறிவித்ததாகவும், எதிர்பார்த்தது போலவே ரஷ்ய இராணுவம் தாம் விரித்த வலையில் வீழ்ந்ததாகவும் உக்ரேனியாவிலிருந்து வரும் விபரங்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்ய இராணுவம் தனது ஆயுதங்களையும், துருப்புகளையும் உக்ரேன் தாக்கப்போவதாகக் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பவே, சார்க்கிவ் நகரம் உட்பட்ட கணிசமான பிராந்தியம் மீண்டும் உக்ரேன் கைப்பற்றியிருக்கிறது. உக்ரேன் இராணுவத்தின் இந்த நகர்வு ரஷ்யாவுக்கு மூக்குடைப்பாகக் கருதப்படுவதுடன் நாட்டில் பெரும் மகிழ்ச்சியையும் உண்டாக்கியிருப்பதாகச் சர்வதேசச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

ரஷ்யாவின் இராணுவச் செய்திகள் உக்ரேனின் சமீபத்திய தாக்குதல்களால் பெறப்பட்ட வெற்றியை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. 

வார இறுதியில் வெளிவந்த உக்ரேனின் உற்சாகமான செய்திகளை அடுத்து ஞாயிறன்று மாலை உக்ரேனின் பல பகுதிகளில் மின்சாரமும், நீர் இல்லாமல் போனது. அதன் காரணம் ரஷ்யா வேண்டுமென்றே நீர், மின்சாரம் ஆகியவற்றை விநியோகம் செய்யும் மையங்களைத் தாக்கியிருப்பதாக உக்ரேன் சார்பில் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *