இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 2

சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள் முதல் ஐ.நா. சபையின் அமைப்புகள் வரை ஒவ்வொரு அமைப்பும் தமது இயலுமை, ஆளணி என்பவற்றுக்கு ஏற்ப சுனாமிக்குப் பின்னராக மீள் கட்டமைப்பில் பங்கேற்றன.

பகுதி 1 ஐ வாசிக்க இங்கே அழுத்தவும்

இவ்வாறான உதவிகள் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு தமது வாழ்க்கையை மீளத் தொடங்குவதற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தன. அதேநேரம் ஆரம்பத்தில் ஒருங்கிணைப்பில் இருந்த குறைபாடும் தமது சக்தியை மீறி சில அமைப்புகள் அகலக் கால் வைத்தமையும், நிதிகளை விரைவாகச் செலவிட கொடை நிறுவனங்களும் கொடை வழங்கிய நாடுகளும் கொடுத்த நெருக்கடியும் பல்வேறு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தின.

உடனடி உதவிகள்

ஆழிப் பேரலையின் தாக்கத்தால் ஏற்பட்ட பல சேதங்களை உடனடியாக சரிசெய்ய முடியாத நிலையில் சில மேற்கு நாடுகளின் நேரடித் தலையீடு அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட பல வீதிகளைத் துரித கதியில் தற்காலிகமாக மீளக் கட்டமைக்க உதவியது. (பின்னர் படிப்படியாக நிரந்தர வீதிகள் அமைக்கப்பட்டன.) இது, நாட்டின் ஒவ்வொரு கரையோரப் பகுதிக் கிராமங்களுக்கும் நிவாரண உதவிகள் சென்றடைய உதவியது. நிறுவனங்கள் மட்டுமன்றி பல தனிப்பட்ட குடும்பங்களும்  பலவும் முன்வந்து நேரடியாகவும் சமூக அமைப்புகள் ஊடாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகள், உடைகள், வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் என்பவற்றை கொடுத்து உதவின.

ஆனால் முதல் சில வாரங்களுக்கு இவ்வாறான உதவிகள் சரியான முறையில் கட்டமைக்கப்படாத நிலையில் உடனடி நிவாரண உதவிகளும் சீரற்ற வகையிலேயே பகிரப்பட்டது. உதாரணமாக ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு உதவி வழங்கச் செல்லும் ஒரு குழு பிரதான வீதியிலிருந்து பிரிந்து ஊருக்குள் நுழைந்ததும் முதலில் எதிர்ப்படும் வீடுகளில் உள்ளவர்களுக்குத் தாம் கொண்டு செல்லும் பொருட்களைக் கொடுத்துவிட்டு திரும்பினர். பாதை சீராக இல்லாமை அல்லது கொண்டு சென்ற பொருட்களின் அளவு போதாமையால் அந்தப் பிரிவின் மறுமுனையில் இருந்த குடும்பங்களுக்கு அந்தக் குழுவின் உதவி கிடைக்காமல் போனது. மறுநாள் வேறு ஒரு குழு செல்லும்போது மீண்டும் அதே கதைதான். ஏனெனில் அவர்களிடம் ஏற்கனவே அந்தப் பகுதிக்கு என்ன உதவி கிடைத்தது என்ற தரவு இருந்திருக்காது. அவர்களும் அந்தப் பிரிவில் நுழையும்போது எதிர்ப்படுவோர்களுக்கு அனைத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பி விடுவர்.

இதனால் அதாவது அந்தப் பிரிவின் முன் பகுதியில் இருப்பவர்களுக்கு தேவைக்கு மேலதிகமாக பொருட்களும் உதவிகளும் கிடைத்தன. மற்றவர்களுக்கு மிகக் குறைவான உதவிகளே கிடைத்தன. அவ்வாறு மேலதிகமாக பொருட்களைப் பெற்றுக் கொண்டவர்களில் பலர் அவ்வாறு கிடைத்த மேலதிகப் பொருட்களை அண்மையில் இருந்த கடைகளுக்கு குறைந்த விலைக்கு  விற்றுப் பணத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் அதற்காக அவர்களைத் தவறு சொல்ல முடியாது. ஏனெனில் சரியாக விசாரிக்காது பொருட்களைப் பகிர்ந்தது கொடையாளிகளின் தவறுதானே? ஆனால் இந்த நிலை ஆரம்பத்தில் ஒரு சில வாரங்களுக்கு நீடித்தது. பின்னர் அரச அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளூர் சமூக அமைப்புகளும் இணைந்து வேலை செய்யத் தொடங்கிய பின்னர் படிப்படியாக இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது.  

மீள்கட்டமைப்பும் சிவில் சமூக அமைப்புகளும்

உடனடி நிவாரணப் பணிகள்  செய்யப்பட்டு வந்த முதல் ஆறு மாத காலப் பகுதியில் பல் தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் ஏற்கனவே பணிபுரிந்து வந்த சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் ஐ.நா.வின் அமைப்புகளும் உடனடி நிவாரண உதவிகளைக் வழங்கிக் கொண்டே இன்னொரு புறத்தில் மீள் கட்டமைப்பு வேலைக்களுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டன. அதுவரை இலங்கை மக்கள் கேள்விப்பட்டிராத பெயர் கொண்ட புதுப் புது நிறுவனங்களும் களத்தில் இறங்கின.

பல்வேறு சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், மேற்குல நாடுகள் உடனடியாக தருவதற்கு தயாராக இருந்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக சிறிய நிறுவனம் முதல் சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் வரை தமது இயலளவுக்கு ஏற்ற வகையில் திட்ட முன்வரைவுகளை எழுதிக் குவித்தன. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நாட்டுக்கான உதவி என்ற இரக்க உணர்வு முன்னிறுத்தப்பட்ட நிலையில் வழமையாக எதிர்பார்க்கும் நிறுவனத் தகுதிகள், குறித்த உப துறையில் முன் அனுபவம், நிறுவனத்தின் ஆளணி ஆற்றல் என்பன பற்றி இறுக்கமாக ஆய்வு செய்யாது நிதிகள் மிக விரைவாக சில விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

இவ்வாறு வழங்கப்பட்ட நிதி இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கினுள் பாய்ச்சப்பட வேகம் ஒரு மூன்றாம் பேரலையாக இலங்கையைத் தாக்கியது. இதனால் ஏற்பட்ட சேதம் நீண்ட காலத்திற்கு இலங்கையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தியது எனலாம். இவ்வாறு வந்த நிதியினால் பல சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டன. அதேநேரத்தில் பல பாதகமான விளைவுகளும் ஏற்பட்டன. உள்ளூர் தொழிற்சந்தையிலும் திடீர் மாற்றம் ஏற்பட்டது. பல்வேறு வகையான பணக் கையாடல்கள், அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றன.

அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் தோற்றம்

சுனாமியின் பின்னர், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இயற்கைச் சீற்றங்களின்போது உடனடியாக மக்களை எச்சரிக்கும் வகையிலும் அனர்த்தம் நிகழும் நேரத்தில் விரைந்து செயற்படும் வகையிலும்  தேசிய, மாகாண, மாவட்ட, மற்றும் உள்ளூராட்சி மட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதன் உறுப்பினர்களுக்கு பயிற்சிகளும் ஐ.நா. போன்ற அமைப்புகளின் உதவியுடன் வழங்கப்பட்டன. நவீன உபகரணங்களும் வழங்கப்பட்டன. ஆனால் காலபோக்கில் இவற்றின் செயற்பாடுகளை மெல்ல மெல்ல தேய்வடைந்து போனதும் அதன் பின்னர் ஏற்பட்ட சில இயற்கை அனர்த்தங்களின்போது இந்த அமைப்புகள் வினைத்திறன் அற்றதாக இருந்ததும் வேறு விடயம்.

உட்கட்டுமான வளர்ச்சி

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பல வீதிகள், சந்தைத் தொகுதிகள், வீடுகள், அரச நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்பன முற்றாகவோ பகுதியாகவோ சிதைவடைந்த நிலையில் மீள் கட்டுமானதிற்கெனக் கிடைத்த நிதி பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. பல அரச அலுவலகங்கள் முன்னர் இருந்ததை விட புதுப் பொலிவுடன் மீண்டும் எழுந்தன. சந்தைகள் மேலும் வசதிகள் கொண்டனவாக, முன்னரைவிட முறையான வடிகாலமைப்புக் கொண்டவையாக அமைக்கப்பட்டன. புலம் பெயர் சமூகமும் உள்ளூர் சமூகமும் அள்ளிக் கொடுத்ததில் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் முன்னரை இருந்ததை விட சிறப்பானதாக அமைக்கப்பட்டன.

வீதிகளும் அவ்வாறே முன்னரை இருந்ததை விட தரமானதாக அமைக்கப்பட்டன.  மணல் ஒழுங்கையாக இருந்த சில சிறுவீதிகள் கூட தார் போட்டப்பட்ட வீதிகளாக மாறின. வீடிழந்தவர்கள் பலருக்கும் முன்னர் இருந்ததைவிட சிறந்ததாக வீடுகள் நன்கொடையாகக் கிடைத்தன. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சமூக சேவை நிறுவனங்களுக்கு கட்டடம் உபகரணங்கள் என்பன கிடைத்தன.

ஆனாலும் இவ்வாறான கட்டுமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது பல சிக்கல்களும் சவால்களும் தோன்றின.

புதிய வீட்டுத் திட்டங்களும் சவால்களும்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் கடற்கரையோரங்களில் அலையாத்தித் தாவரங்களை (கண்டல் தாவரங்கள்) நடுவதற்கு நடவடிக்கை எடுத்த அதேநேரம் கடற்கரையிலிருந்து 650 மீட்டர் தூரத்துக்குள் எந்த ஒரு கட்டுமானத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடும் நடைமுறைக்கு வந்தது. இதனால் உல்லாச விடுதிகள் போன்றவற்றுக்குப் பெரிய பாதிப்பு வரவில்லை. ஆனால் மீனவர் சமூகத்தில் இதன் தாக்கம் இருந்தது. அதேநேரம் சுனாமியின் தாக்கம் அதுவரை காலமும் கடற்கரையோரமாக அத்துமீறி வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு வழியமைத்தது.

கடற்கரைக் கிராமங்கள் அனைத்திலும் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் கடலோரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தள்ளியே அமைத்துக் கொடுக்கப்பட்டன. சில இடங்களில் தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டாலும் சில இடங்களில் அவ்வாறு வீடமைப்பதற்கு நிலப் பற்றாக்குறை தடையாக அமைந்தது. ஒரு சில இடங்களில் மீனவ சமூகத்தவரை தமது ஊருக்குள் கொண்டுவருகிறார்கள் என்ற பிற சமூகத்தவரின் எதிர்ப்பும் இருந்தது. இவ்வாறான இழுபறியினால் சில பிரதேச சபைப் பிரிவுகளில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதில் எதிர்பாராத காலதாமதமும் ஏற்பட்டது.

நிலப்பற்றாக்குறை இருந்த இடங்களில் அடுக்குமாடிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இது பல மீனவக் குடும்பங்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியது. நிலத்தோடு வீடமைத்து வாழ்ந்தவர்களுக்கு பிளாட் வீடுகள் சுகம் தரவில்லை. அவர்களில் கணிசமானோர் தமக்குக் கொடுத்த வீட்டை குறைந்த விலைக்கு விற்றுவிட்டு தமது பழைய இடத்தில் குடிசைகளைக் கட்டிக் கொண்டு அங்கேயே வசித்த நிகழ்வுகளும் நடந்தேறின.

மறுபுறத்தில் உரியநேரத்தில் கிராமசேவகரிடம் பதிவு செய்யத் தவறியவர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட வீடுகள் கிடைக்காது போனது. அதேபோல குடும்பத்தில் தனியொருவராக எஞ்சியிருந்தோருக்கு வீடு கொடுக்கப்படவில்லை. அவ்வாறு வீடு கிடைக்கதவர்கள் பதினெட்டு வருடங்கள் கழித்து இன்றும் மிகச் சிரமப்பட்டு தமது வாழ்க்கையை நடத்துபவர்களாகவும் சிறு ஓலைக் குடிசையில் வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

(தொடர்ந்து பேசுவோம்…)

  • வீமன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *