உலகின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரர் என்று கருதப்பட்ட பெலே மரணமடைந்தார்.

எட்சன் அரந்தேஸ் டூ நசிமெண்டோ என்ற பெயரைக் கொண்ட உலகத்தின் மிகச் சிறந்த உதைபந்தாட்ட வீரர் பெலே என்ற பெயரில் அறியப்பட்டவராகும். புற்று நோய்க்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தனது 82 வயதில் மரணமடைந்தார். 

பிரேசிலைச் சேர்ந்த அவர் சுமார் 30 வருடங்கள் உதைபந்தாட்டத்தில் ஈடுபட்டு எவரும் தொடமுடியாத சிகரங்களைத் தொட்டு அவ்விளையாட்டு ரசிகர்களின் மனதில் மறக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்றவராகும். தான் விளையாடிய உத்தியோகபூர்வமான மோதல்களில் 732 கோல்கள் உட்பட, மற்றைய மோதல்களையும் சேர்த்தால் அவர் 1281 கோல்களைப் போட்டிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

1958 இல் சுவீடனில் உலகக்கிண்ணத்துக்கான நடந்த இறுதி மோதலில் சுவீடனுக்கு எதிராக அவர் வலைக்குள் பந்துகளை அடித்துத் தனது 17 வது வயதில் உலகத்தைக் கவர்ந்தார். அந்த மோதலில் அவர் 2 கோல்களைப் போட்டார். 5 – 2 என்ற வித்தியாசத்தில் பிரேசில் முதல் தடவையாக உலக்கக்கிண்ணத்தை வென்றபோது பெலே தேசிய கதாநாயகன் ஆகினார். அவரது அணியே நாலு வருடங்களின் பின்னரும் அந்தக் கோப்பையை சிலேயில் உலகக்கிண்ணத்துக்கான மோதல்கள் நடந்தபோது வென்றது. அந்தக் கடைசி மோதலில் அவர் காயமடைந்ததால் அவரால் விளையாட முடியவில்லை. அது அவரது விளையாட்டு வரலாற்றில் முதலாவது காயமாகும். 

1966 இல் உலகக்கிண்ணத்துக்கான மோதல்கள் இங்கிலாந்தில் நடந்தபோது முதல் கட்ட மோதல்களிலேயே பிரேசில் தோற்றுவிட்டது. அச்சமயத்தில் விளையாடிய அணிகள் சில எதிரணிகளுக்குக் காயங்கள் உண்டாக்கக்கூடியதாக வேண்டுமென்றே விளையாடியதாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டன. போர்த்துக்கல், ஹங்கேரி ஆகிய நாடுகள் பிரேசில் வீரர்களைக் காயமடையத்தக்கதாக மோதின. அதையடுத்துத் தான் என்றுமே உலக்கக்கிண்ணத்துக்கான மோதல்களில் பங்குபற்றப் போவதில்லை என்று முடிவுசெய்தார் பெலே. 

பலரின் வேண்டுகோளுக்குப் பின்னர் 1970 இல் மெக்சிகோவில் நடந்த உலகக்கிண்ணத்துக்கான மோதல்களில் மீண்டும் பிரேசிலுக்காக விளையாடினார் பெலே. அந்த முறையும் அவரது அணி உலகக்கோப்பையை வென்றது. உலகில் இதுவரை மூன்று தடவைகள் உலகக்கோப்பைக்காக விளையாடி வென்ற ஒரே வீரர் என்ற கௌரவத்தையும் பெலே பெற்றார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *