அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார் டுவார்ட்டே
இரண்டு தவணைக்காலம் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக இருந்த ரொட்ரிகோ டுவார்ட்டே தான் அடுத்த தேர்தலின் பின்பு அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவதாக அறிவித்தார். அவருடைய ஆதரவாளராக இருந்து அவரால் கட்சிப் பதவியிலிருந்து விலக்கப்பட்ட மன்னி பக்குவாயோ வேட்பாளராகக் குதித்திருக்க அவரது கட்சிக்குள் அரசியல் பிளவும் ஏற்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியாக இரண்டு தடவைகளுக்குப் பின்னர் போட்டியிட முடியாத நிலைமையில் தான் உப ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார் டுவார்ட்டே. அதை வாபஸ் வாங்கிக்கொண்டு அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தது எவரும் எதிர்பாராத ஒரு அரசியல் நகர்வாகும். தனது விலகலை அறிவித்தபோது டுவார்ட்டே மிகவும் பலவீனமாகக் காணப்பட்டதாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வருட நடுப்பகுதியில் அவரது ஆரோக்கியம் பற்றிய வதந்திகள் பல பரவியிருந்தன. ஆனால், தான் சுகமாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
டுவார்ட்டேயின் மகள் ஜனாதிபதி வேட்பாளராகக் கூடும் என்ற வதந்தி மீண்டும் பலமாகியிருக்கிறது. சாரா டுவார்ட்டே தான் போட்டியிடுவதில்லையென்று அறிவித்திருந்தாலும் கருத்துக் கணிப்பீடுகளில் அவர் மூன்றிலொரு பங்கு மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்