பல மணிநேர முடக்கத்தின் பின்முகநூல், வட்ஸ்அப் வழமைக்கு! உலக பங்குச் சந்தைகள் சரிவு!!

முகநூல் நிறுவனத்தின் சமூக ஊடக சேவைகள் அனைத்தும் திங்கட்கிழமை மாலை முதல் பல மணி நேரங்களுக்கு முடங்கின. இதனால் உலகெங்கும் முகநூல் கணக்குகளும் அதனோடு இணைந்த மெசஞ்சர் (Messenger) வட்ஸ்அப் (WhatsApp) இன்ஸ்ரகிராம்(Instagram) சேவைகளும் திடீரென இணையத்தில் இருந்து மறைந்தன.

பிரான்ஸ் நேரப்படி நேற்று மாலை ஆறுமணி தொடக்கம் நள்ளிரவு வரை முடக்கம் நீடித்தது. இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

உலகெங்கும் லட்சக்கணக்கான சமூகஊடகப் பயனாளிகளைக் குழப்பத்துக்குஉள்ளாக்கிய சேவைத் தடங்கலுக்கு தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம் என்று விளக்கம் அளித்துள்ள முகநூல் நிர்வாகம், அதற்காக மன்னிப்புக் கோரியிருக்கிறது.சேவைகள் குழம்பியதற்குக் காரணமான பூர்வாங்கத் தகவல்களை அது வெளியிட்டிருக்கிறது.

முகநூல் மற்றும் அதன் சமூக ஊகடத் தளங்களின் தரவு மையங்களுக்கு(data centers) இடையே தொடர்புகளை ஒருங்கிணைக்கின்ற உள்ளமைவில்(configuration) ஏற்பட்ட மாற்றங்களே பல தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு வழிவகுத்தது என்பதைப் பொறியியல் வல்லுநர் குழுவினர் கண்டறிந்துள்ளனர் – இவ்வாறு முகநூல்நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்தக் கோளாறுகளால் பயனாளர்களது தரவுகளுக்கு (user data) எந்தப் பாதிப்புகளும் அவதானிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்திருக்கிறது.

டிஜிட்டல் ஜாம்பவானாகிய முகநூலின்முடக்கம் உலகெங்கும் பங்குச் சந்தைகளில் பலமாக எதிரொலித்திருக்கிறது.நியூயோர்க் பங்குச்சந்தை விலைச் சுட்டி திங்களன்று ஆறு சதவீதம் சரிவைக் காட்டியது. சமூகவலைத் தளங்கள் ஊடான உலகின் தொழில் நுட்பச் சந்தையில் அமெரிக்காவின் தொழில்நுட்பக் கம்பனியான முகநூல் முக்கிய இடத்தை வகிக்கிறது. முகநூல் சேவைகள் இதற்கு முன்னரும் இது போன்று முடங்கி உள்ளன. ஆனால் உலகெங்கும் 7.5 பில்லியன் பயனார்களைப் பாதித்த நேற்றைய ஆறு மணி நேரமுடக்கம் அதன் வரலாற்றில் மிகத் தீவிரமானது என்று குறிப்பிடப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *