பேஸ்புக்கை நஷ்ட ஈடு கோரி வழக்குப் பதிந்திருக்கும் ரோஹின்யா அகதிகள்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமக்கு எதிராக பொய்களைப் பரப்புவதிலும், வன்முறைகளைத் தூண்டிவிடுவதிலும் ஈடுபட்டு வருபவர்களுக்கு பேஸ்புக் தனது தளத்தைப் பாவிக்க உற்சாகமளித்திருப்பதாகக் கூறி ரோஹின்யா இன அகதிகள் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். பேஸ்புக்கின் ஒரே நோக்கம் மேலும் வளர்ந்து இலாபம் சம்பாதிப்பது மட்டுமே என்று அவர்களுடைய குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2017 இல் மியான்மார் இராணுவத்தின் உதவியுடன் அந்த நாட்டில் வாழ்ந்த ரோஹின்யா அகதிகள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது. அதனால், லட்சக்கணக்கான ரோஹின்யா இனத்தவர் அங்கிருந்து தப்பியோடி பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். அங்கும் அவர்களுடைய வாழ்வு நிலையாக இல்லை.  

பேஸ்புக் தனது வளர்ச்சியை மட்டும் நோக்கில் கொண்டு உணர்ச்சிவசமான, உக்கிரமான, பொய்ச்செய்திகளை, வன்முறையைத் தூண்டும், இகழும் கருத்துக்களை உந்தும்படியான சொற்களைப் பாவித்து எழுதப்படும் கருத்துக்களை அதிகம் பரவவிடுவதற்கேற்றபடி தன் தொழில்நுட்பத்தை இயக்கி வருவதாக அந்த நிறுவனத்தின் உயர்மட்ட ஊழியர்கள் சிலர் கூட வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  

பேஸ்புக் தனது தளத்தில் எழுதப்படும் விடயங்கள் மீது பொறுப்பெடுத்து அவைகள் சமூகத்தில் விரும்பத்தகாத நடப்புக்களை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பல நாடுகளும், அமைப்புக்களும் அதன் மீது கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்திருக்கின்றன. தாம் அதற்காக ஒத்துழைப்பதாகப் பேஸ்புக் தலைமை உறுதியளித்திருப்பினும் இதுவரை அதற்காக அதிகம் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. சில பத்திரிகைத் தளங்களுடன் கூட்டுச்சேர்ந்து பொய்ச்செய்திகளை அகற்றும் நடவடிக்கைகளில் பேஸ்புக் சமீபத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறது.

ரோஹின்யாக்களின் வழக்கு பேஸ்புக் சில நாடுகளில் அந்த நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தனது தளத்தில் நடப்பவைகளுக்குப் பொறுப்பேற்கவேண்டி வரினும், சர்வாதிகாரிகளின் பிடியிலிருக்கும் நாடுகளான மியான்மார் போன்றவைகளில் அப்படியேதும் கட்டுப்பாடுகள் அனுசரிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டுகிறது. அதனால், வேண்டுமென்றே திட்டமிட்டு மியான்மாரில் தமது இனத்தினருக்கு எதிராகப் பரப்பப்படும் செய்திகளால் தாம் பாதிக்கப்படுவதைக் குறிப்பிடுகின்றன. சுமார் 150 மில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் பேஸ்புக்கை நீதிமன்றத்தின் முன் இழுத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்