துர்நாற்றம் வீசுவதாக மீனவ பெண்ணை பேரூந்திலிருந்து இறக்கி விட்ட நடத்துனர் – வலுக்கும் எதிர்ப்பு

பிந்திய செய்தியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது

குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடியை சார்ந்த மீன் விற்று தன் குடும்ப வருமானத்தை நகர்த்தி வரும் ஒரு தாயை பேருந்திலிருந்து இறக்கி விட்ட கொடூரம் நடந்திருப்பது அனைத்து மீனவ மக்களையும் கொதிப்படைய செய்துள்ளது .
வாணியக்குடி ஊரை சார்ந்த செல்வமேரி வயது 55 என்பவர் குடும்ப வறுமை காரணமாக மீன் விற்று குடும்பத்தை பராமரித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுகிழமை நாகர்கோவில் வடசேரி சந்தையில் மீன் விற்று விட்டு ஒரு பையில் தனது குழந்தைகளுக்கு பழம் மற்றும் இதர பொருட்கள் வாங்கி விட்டு நாதர் கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இரவு 8 மணியளவில் வாணியக்குடியை அடுத்த மீனவ கிராமமான கோடி முனைக்கு செல்லும் 5D என்ற வழிதடத்தில் செல்லும் பேருந்தில் ஏறி இருக்கிறார். பேருந்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் வந்துள்ளனர். பயணச்சீட்டு கொடுக்க செல்வமேரி என்பவரை அணுகிய நடத்துனர் “நீ மீன் வச்சிருக்கியா?” என்று கோபத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு இல்லை எனது பையில் பழங்கள் மட்டுமே உள்ளது என்றதும் உனது உடையிலிருந்து மீன் நாற்றம் வருகிறது. எனக்கு வாந்தி வருது உடனே கீழே இறங்கு என்று கோபத்துடன் மிரட்டியிருக்கிறார். ஆனால் செல்வமேரி கீழே இறங்க மறுத்து பயணத்தை தொடர்ந்திருக்கிறார். பயண வழி நெடுகிலும் நடத்துநர் செல்வமேரியை திட்டி தீர்த்திருக்கிறார். பேருந்து குளச்சல் கடற்கரை சந்திப்பை அடைந்ததும் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்டுள்ளார். செய்வதறியாத அந்த தாய் அழுது கொண்டே நடைபயணமாக தனது சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளார். சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று மீனவர் சங்கங்களும் ஆம் ஆத்மி கட்சியும் அரசை வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளனர்.

பிந்திய செய்தி : அதனைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யுமாறு போக்குவரத்து துறை பொது மேலாளர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

செய்தி எழுதுவது : தமிழ்வானம் சுரேஷ்