220 மில்லியன் ஜக்பொட் வென்றவர் பொலினேசியாவைச் சேர்ந்த யுவதி!
தாத்தாவைப் பார்த்து லொத்தோ வெட்டிய பேர்த்திக்கு பேரதிர்ஷ்டம்.
ஈரோ மில்லியன் நல்வாய்ப்புச் சீட்டில் ஐரோப்பாவிலேயே ஆகக் கூடிய தொகையான 220 மில்லியன் ஈரோக்கள் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவர் யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.அவர் பொலினேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றாகிய தஹிட்டியைச்(Tahiti) சேர்ந்த ஓர் இளம் யுவதி என்பதை தேசிய லொத்தர் நிறுவனம் (Française des jeux) வெளியிட்டிருக்கிறது.
தன்னைப் பற்றிய மேலும் விவரங்களை வெளிக் காட்ட விரும்பாத அந்த இளம் பொலினேசிய யுவதி, இந்த மாபெரும் அதிர்ஷ்டத்துக்குப் பின்னர் தனது வாழ்வு மாற்றிவிடப் போவதில்லை என்றும்”நான்தொடர்ந்தும் என் சொந்தக் கால்களிலேயே நடக்கப் போகிறேன்” எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஆயினும் பனி மலைப் பிரதேசங்களைச் சென்று பார்க்கவேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றப் போவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.உலகின் எல்லா கண்டங்களிலும் ஒரு தடவை கால் பதிக்கவும் அவர் ஆசைப்படுகிறார். “எனது தாத்தா எப்போதும் லொத்தர் விளையாடுவதை பார்த்திருக்கிறேன். ஒரேயொரு நாள் அவரைப் போன்று நானும் விளையாடுவேன்.அந்த முதல் நாளிலேயே அதிர்ஷ்டத்தை வென்று காட்டுவேன் என்று அவரிடம் அடிக்கடி கூறிவந்தேன்.அதன்படியே எனது முதல் அதிர்ஷ்டச் சீட்டை வாங்கி அதிலேயேபெரும் தொகையை வென்றுவிட்டேன் “என்று அந்த யுவதி கூறியிருக்கிறார்.
அதிர்ஷ்ட இலக்கங்களைக் குறிப்பிட்டுவாங்கிய ஈரோ மில்லியன் பற்றுச் சீட்டை முதலில் எனது படுக்கைத் தலையணையின் கீழ் வைத்தேன். பிறகு அதனை எடுத்து உடுப்பு அலுமாரியில் வைத்தேன் எங்காவது மறந்து விட்டுவிடுவேனோ என்ற பரபரப்பில் அடிக்கடி அதை இடம்மாற்றி வைத்தேன் – என்று தனது முதல் லொத்தோ விளையாட்டு அனுபவத்தைஅவர் விவரித்திருக்கிறார்.
பிரான்ஸின் பெரு நிலப் பரப்புக்கு வெளியே வெற்றி கொள்ளப்பட்டுள்ள இந்தஅதிர்ஷ்டத் தொகை, ஈரோ மில்லியன்லொத்தர் வரலாற்றில் ஐரோப்பாவில்வெல்லப்பட்ட அதிகூடிய ஜக்பொட் தொகையும் ஆகும். கடைசியாக சுவிஸ்நாட்டவர் ஒருவர் 210 மில்லியன் பரிசைவென்றிருந்தார்.
குமாரதாஸன். பாரிஸ்.