ஜேர்மனியின் மொத்தக் காடுகளில் 5 %, 2018 க்குப் பின்னர் அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஜனவரி 2018 முதல் ஏப்ரல் 2021 வரை ஜேர்மனியின் காடுகளில் 5 விகிதமானவை – 501,000 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக ஜேர்மனிய அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமான அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக ஜேர்மனிய ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜேர்மனியின் மூன்றிலொரு பகுதி காடுகளாக இருக்கின்றது.
அழிக்கப்பட்ட காடுகள் முழுவதுமே இயற்கையாக அழியவில்லை. பெரும்பாலும் குறிப்பிட்ட பகுதிகளில் காடுகளில் பரவிவந்த வியாதிக் கிருமிகள் மேலும் அதிகமாகப் பரவாமலிருக்க அவைகளை அழிப்பதற்காகக் காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அழிப்புக்கள் பெரும்பாலும் ஜேர்மனியின் மத்திய பிராந்தியத்திலேயே நடந்திருக்கின்றன.
சமீப வருடங்களில் ஏற்பட்ட வழக்கத்துக்கு மாறான வெம்மையும், வரட்சியுமே காடுகளை அழிக்கும் ஜந்துக்கள் பரவலாக உண்டாகக் காரணமாக இருந்திருக்கின்றன. கடந்த வருடங்களில் ஜேர்மனியின் பாகங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளம், மழை ஆகியவைகளாலும் அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இவைகள் அடிக்கடி ஏற்படக் காரணமாக இருப்பது காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஜேர்மனியும், ஐரோப்பிய ஒன்றியமும் காலநிலை மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை போட காடுகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டி வருகின்றன. காற்றில் விகித அளவில் அதிகமாகிவரும் கரியமில வாயுவை உறிஞ்சுவதில் காடுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதற்காக ஒன்றிய அளவிலும் தேசிய அளவிலும் 2021 இல் விளக்கமான திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்