உக்ரேன் குடிமக்களுக்குப் பிரத்தியேக அகதிப் பாதுகாப்பு வழங்கப் போகிறது ஐரோப்பிய ஒன்றியம்.

பெருமளவில் ஐரோப்பாவுக்குள் ஏற்படக்கூடிய புலம்பெயர்தல்களுக்கு உதவும் முகமாக 2001 இல் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவந்திருந்த பிரத்தியேகச் சட்டம் முதல் முறையான நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. அதன்படி, உக்ரேனிலிருந்து ஒன்றியத்துக்குள் வருபவர்களுக்கு ஒரு வருடத் தற்காலிக விசா வழங்கும் திட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படும்.

தற்போதைய நிலைமையில் உக்ரேனியர்கள் ஒன்றியத்துக்குள் நுழையலாம், 90 நாட்கள் மட்டும் தங்கலாம். பிரத்தியேக அகதிகள் சட்டத்தின்படி அவர்கள் தமது முதல் வருட அகதிக்காலத்தின் பின்பு மேலும் மூன்று வருடங்கள் அகதிகளாக வாழ விண்ணப்பிக்கலாம். 

சகல ஒன்றிய நாடுகளிலும் அவர்களுக்கு சமூக சேவை, மருத்துவம், கல்வி, தொழில் வாய்ப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்துக்கொள்ளும் உரிமை ஆகியவை வழங்கப்படும். உக்ரேனில் வாழும் மற்ற நாட்டவர்களுக்கும் அவர்கள் தத்தம் நாடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமை இருக்கும் பட்சத்தில் அதேவித உரிமைகள் வழங்கப்படும். மேலும், ஒன்றிய எல்லைக்குள் உக்ரேனிலிருந்து நுழைபவர்கள் தகுந்த அடையாள அட்டைகள் இல்லாவிட்டாலும் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.  

உக்ரேனிலிருந்து வரும் அகதிகளின் விண்ணப்பங்கள், மற்ற நாட்டு அகதி விண்ணப்பங்களுடன் சேர்க்கப்படமாட்டா. அவர்களுக்குப் பிரத்தியேக முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு ஒன்றிய நாடும் தம்மால் எத்தனை உக்ரேன் அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்