கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைத்திருக்கும் பாலத்தில் பாரவண்டி எரிந்து வெடித்ததால் தீப்பிடித்து எரிகிறது.

சனியன்று காலையில் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைத்திருக்கும் பாலத்தில் (The Kerch Bridge) தீப்பிடித்ததில் அப்பாலத்தின் ஒரு பகுதி எரிந்து அழிந்தது. உக்ரேனின் பாகமாக இருந்த கிரிமியா தீபகற்பத்தை 2014 இல் ரஷ்யா தாக்கிக் கைப்பற்றியது. அதையடுத்து அங்கே ஒரு தேர்தலை நடத்தி, மக்கள் ரஷ்யாவுடன் இணைந்து வாழ விரும்புவதாகக் கூறி அதை ரஷ்யாவின் பாகமாக்கியது. அத்தீபகற்பத்தை மீண்டும் தமதாக்குவதாக உக்ரேன் அரசு சூழுரைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் வெளியாகிய ரஷ்யச் செய்திகளின்படி பாலத்தில் சென்றுகொண்டிருந்த சரக்கு வண்டியிலிருந்த எரிபொருள் தொட்டியொன்று தீவிபத்துக்கு உள்ளாகியதாக அறிவித்தது. அதன் பின்னர் ரஷ்யாவின் தீவிரவாத ஒழிப்பு அதிகாரம் வெளியிட்ட செய்தியின்படி பாலத்தில் பயணித்துக்கொண்டு இருந்த எரிபொருள் பாரவண்டியொன்று வெடித்து, ரயிலில் அத்தீ பரவியதாகக் குறிப்பிடப்பட்டது. உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை.

உக்ரேன் ஜனாதிபதியின் உதவியாளர் வெளியிட்டிருக்கும் செய்தியில் ‘சர்வதேசச் சட்டத்துக்கு எதிராகத் தம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பகுதிகளையெல்லாம் மீட்டெடுப்பது தமது குறிக்கோள்,’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. புத்தின் காலத்தின் முக்கிய கட்டடங்களில் ஒன்றான கிரிமியா பாலத்தை ஒழித்துக்கட்டுவது அவசியம் என்று உக்ரேன் இராணுவம் பல தடவைகள் குறிப்பிட்டிருக்கிறது. கிரிமியாவில் சமீபத்தில் உக்ரேன் காற்றாடி விமானங்கள் மூலம் வெற்றிகரமாகத் தாக்கி ரஷ்யாவின் இராணுவத் தளங்களை அழித்திருக்கிறது. 

கிரிமியாப்பாலம் ரஷ்யாவின் இராணுவம் தனது துருப்புகளுக்குத் தேவையானவற்றைத் தாம்  தெற்கு உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கு அவசியமானது.  பாலத்தில் எரிந்துகொண்டிருந்த தீ அணைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர மேலுமொரு நிலத் தொடர்பு மட்டுமே ரஷ்யாவுக்கு கிரிமியாவுடன் இருக்கிறது. பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்துவிட்டதால் அது பாவனைக்கு உகந்ததல்ல என்று சகல போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *