ஓய்வு நாளில் பயணம் செய்யலாகாது என்ற யூத விதியை மீறி ரஷ்யா சென்று புத்தினைச் சந்தித்தார் இஸ்ராயேல் பிரதமர்.

பல தடவைகளில் பிரேரிக்கப்பட்டபோதும் இஸ்ராயேலின் பிரதமரைச் சந்திக்க மறுத்திருந்தா ஜனாதிபதி புத்தின். உக்ரேன் ஜனாதிபதி செலின்ஸ்கியின் வேண்டுகோளையேற்றுப் புத்தினைச் சந்திக்க இறுதியில் அனுமதி கிடைத்தது பிரதமர் பென்னெட்டுக்கு. சனியன்று அவர் மொஸ்கோ சென்று மூன்று மணித்தியாலங்கள் புத்தினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

“உயிரைக் காக்க முடியுமென்ற நிலையில் மட்டும் சபாத் விதிகளை [யூத ஓய்வு நாள்] மீறலாம்,” என்பது இஸ்ராயேலில் பாவிக்கப்படும் சொற்றொடராகும். எனவே அப்படியொரு நாளில் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பிரதமர் நப்தலி பென்னட் ஈடுபட்டதால் அதன் விளைவுகள் பற்றிப் பெரும் எதிர்பார்ப்புக்கள் உண்டு. ஆனாலும், அப்படியான எதிர்பார்ப்புக்களுக்கு இடமிருக்கலாகாது என்று தனது பயணத்துக்கு முன்னர் கூறி அவற்றைத் தணித்திருந்தார் அவர். கூடவே கிழக்கு உக்ரேனின் பிறந்த தற்போதைய இஸ்ராயேலின் கட்டடத்துறை அமைச்சர் ஸெவ் எல்க்கினும் மொழிபெயர்ப்பாளராகச் சென்றிருந்தார்.

புத்தினைச் சந்தித்த பின்னர் உக்ரேன், அமெரிக்கா பிரான்ஸ் ஜனாதிபதிகளுடன் தொலைபேசியிலும் பெர்லினுக்குச் சென்று பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸை நேரடியாகவும் சந்தித்திருக்கிறார் பென்னெட். அவரது பேச்சுவார்த்தைகளின் குறி என்னவென்ற விபரங்கள் வெளியாகாவிட்டாலும் அம்முயற்சிகளுக்குப் பின்னால் உக்ரேன் ஜனாதிபதியின் ஆதரவும் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

“நடந்திவரும் பேச்சுவார்த்தைகளால் போரை நிறுத்தக்கூடிய சாத்தியங்கள் மிகக் குறைவாக இருப்பினும் இந்த விடயத்தில் மானசீகமாக சகல முயற்சிகளையும் எடுக்கவேண்டிய கடமை இஸ்ராயேலுக்கு இருக்கிறது,” ஞாயிறன்று பிரதமர் பென்னட் தெரிவித்தார்.

அவர் தனது பிரயாணத்தின் பின்னர் இதுவரை மூன்று தடவைகள் உக்ரேனிய ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிடமும் உயர்மட்டத்தில் அவர் தொடர்ந்து தனது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இஸ்ராயேலைப் பொறுத்தவரை உக்ரேனில் போரினால் இடம்பெயர்ந்திருக்கும் யூதர்களை இஸ்ராயேலுக்கு வர உதவுவது என்பது ஒன்றாகும் என்று பென்னட் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் இன்னொரு பக்கத்தில் வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஆராய்ச்சி பற்றிய ஒப்பந்தத்திலும் ஈடுபட்டிருப்பதில் தனது மூக்கை நுழைக்கவும் இஸ்ராயேல் விரும்புகிறது என்பதும் தெரிந்ததே.

 ஈரான் அணுசக்தி ஆராய்ச்சி பற்றிய ஒப்பந்தத்தில் மீண்டும் கைச்சாத்திட்டு சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் தலையெடுப்பதை இஸ்ராயேல் தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது. தனது ஜென்ம விரோதியாக இஸ்ராயேல் கருதும் நாடு ஈரான் ஆகும். அதே சமயம் இஸ்ராயேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவோ ஈரானை மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ள விரும்புகிறது. 

சமீப நாட்களில் வெளியாகியிருக்கும் செய்திகளின்படி குறிப்பிட்ட ஒப்பந்தத்தில் ஈரான் கைச்சாத்திடத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவோ மேற்கு நாடுகள் தம்மீது போட்டிருக்கும் தடைகளைச் சுட்டிக்காட்டி ஒப்பந்தத்தில் தாம் பங்குபற்றுவதானால் ஈரானுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான வர்த்தகங்கள் தடைப்படலாகாது என்று கோருகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *