கிரிமியாவில் ரஷ்ய ஆயுதக்கிடங்கு தாக்கப்பட்டது. அப்பிராந்தியத்தில் அழிவுகளை ரஷ்யா ஒத்துக்கொண்டது.

உக்ரேனின் பாகமாக இருந்து ரஷ்யாவால் 2014 இல் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. கிரிமியாவில் ரஷ்யாவின் இராணுவம் ஆயுதங்களைச் சேர்த்துவைக்கும் மையமொன்றே தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. ரஷ்ய இராணுவ மையமான சக்கி தாக்கப்பட்டு ஒரு வாரத்தினுள்ளேயே  Dzjankoj லிருக்கும் ஆயுதக்கிடங்கு அடுத்தடுத்து அங்கே விழுந்த குண்டுகளால் பெரும் சேதத்துக்கு உண்டாகியதாக ரஷ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

சில நாட்களுக்கு முன்னர் சக்கி இராணுவ விமான மையத்தில் நடந்த தாக்குதலை ரஷ்யா அச்சமயத்தில் ஒரு விபத்து என்றே குறிப்பிட்டது. ஆனால், புதன் கிழமையன்று நடந்த தாக்குதலுக்குப் பின்னர் கிரிமியா பிராந்தியத்தில் தாம் குறிவைத்துத் தாக்கப்படுவதை ரஷ்யா உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட தீயைத் தூரத்திலிருந்து வானத்தில் காணக்கூடியதாக இருந்ததாகச் சாட்சியங்கள் தெரிவித்தன.

அவ்விடத்துக்கு அருகேயிருந்த ரயில் பாதையும், மின்சார பகிர்வு மையமும் கூடத் தாக்குதலுக்குள்ளாகின. Gvardejskoje என்ற கிரிமியாவின் மேலுமொரு ரஷ்யப் போர்விமானத் தளமும் புதனன்று தாக்கப்பட்டதாக ரஷ்ய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

உக்ரேன் தரப்பிலிருந்து நடந்த தாக்குதல்கள் தம்முடையதா என்பது பற்றி எவ்விதச் செய்திகளும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் இராணுவம் சரியான முறையில் தீவிபத்து ஏற்படாமல் தமது மையங்களைப் பாதுகாக்கவில்லை என்று உக்ரேன் இராணுவச் செய்தியொன்று வெளியாகியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *