உக்ரேனிடமிருக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா அனுமதிக்கும்.

புதன் கிழமையன்று துருக்கிக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவும்  துருக்கிய பிரதமர் துருக்கிய வெளிவிவகார அமைச்சரும் நடத்திய பேச்சுவார்த்தைகளின் மூலம் உக்ரேனிடமிருக்கும் உணவுத் தானியங்களை கருங்கடல் துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்ய ரஷ்யா அனுமதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. ரஷ்யா தான் சுற்றிவளைத்திருக்கும் ஒடெஸ்ஸா துறைமுகத்தைத் திறந்து உக்ரேனின் உணவுத் தானியக் கப்பல்கள் வெளியேற வழிவிடலாம் என்று கணிக்கப்படுகிறது.

ரஷ்யா – உக்ரேன் போரால் உலகின் வறிய நாடுகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தெரிந்ததே. சமீபத்தில் நடந்த ஐ.நா-வின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அதற்கான காரணம் ரஷ்யா என்று சுட்டிக்காட்டப்பட்டதை ரஷ்யா மறுத்தது. அதற்கான காரணம் மேற்கு நாடுகள் ரஷ்யா மீது போட்டிருக்கும் தடைகளே என்று திருப்பிக் குற்றஞ்சாட்டுகிறது ரஷ்யா. 

உக்ரேனிடம் ஏற்றுமதிக்குத் தயாராக இருக்கும் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவ வெவ்வேறு நாடுகள் தயாராக இருக்கின்றன. உக்ரேனின் முக்கிய துறைமுகமான ஒடெஸ்ஸா மூலமாக அவற்றை வெளியே கொண்டுவர உதவ துருக்கி முன்வந்திருக்கிறது. அத்துறைமுகத்தை முற்றுக்கையிட்டிருக்கும் ரஷ்யா, குறிப்பிட்ட கப்பல்களைத் துருக்கியின் பாதுகாப்புடன் வெளியேற அனுமதிப்பதாக ரஷ்யா ஒத்துக்கொண்டிருக்கிறது.

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் மெவ்லுத் கவ்ஸோக்லு அங்காராவுக்கு விஜயம் செய்திருந்த தனது ரஷ்ய சகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர், “சர்வதேச உணவுத்தட்டுப்பாடு, விலையேற்றத்தை எதிர்கொள்ள உக்ரேனின் உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவுவது ஒரு நியாயமான கோரிக்கையே,” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ஒடெஸ்ஸா துறைமுகத்தைச் சுற்றிவளைத்திருக்கும் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்க முடியாமல் உக்ரேன் தன் பங்குக்குக் கடலில் பாதுகாப்புக் கண்ணிவெடிகளை போட்டிருக்கிறது. அவைகளை உக்ரேன் அகற்றினால்தான் அவர்களுடைய கப்பல்கள் வெளியேறலாம் என்பதால் அவ்விவகாரம் உக்ரேனின் கையிலிருக்கிறது என்கிறார் செர்கேய் லவ்ரோவ். 

“அவர்களுடைய கப்பல்கள் துறைமுகத்திலிருந்து வெளியேற அனுமதிக்க நாம் தயாரென்று தினசரி குறிப்பிட்டு வருகிறோம். தாம் போட்டிருக்கும் கண்ணி வெடிகளை அகற்றிவிட்டு வெளியேற வேண்டியது அவர்களின் கையிலிருக்கிறது,” என்கிறார் லவ்ரோவ்.

“ரஷ்யாவின் உறுதி நம்பிக்கைக்கு உதவாதது,” என்கிறது உக்ரேன் தரப்பு.

இந்த நிலையில் துருக்கியின் நடுநிலைப் பாதுகாவலர் நிலைப்பாடு அவசியம் என்கிறது துருக்கிய அரசு. ஐ.நா பொதுச்செயலாளர் தரப்பிலிருந்தும் உணவுப் பொருட்களைச் சுமந்திருக்கும் உக்ரேன் கப்பல்களை விடும்படி ரஷ்யாவிடம் அழுத்தம் கொடுத்தப்பட்டு வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *