ஐக்கிய ராச்சியத்தின் எலைக்குள்ளான நீர்ப்பரப்பைக் காக்கத் தயாராகும் கடற்படை

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் ஜோன்ஸனும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வொண்டர் லாயனும் தத்தம் பங்குக்கு எச்சரித்த “ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் பிரிவு” இரண்டு பகுதி மீனவர்களுக்குமிடையே சச்சரவை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் ஐக்கிய ராச்சியத்தின் கடற்படையை எல்லை காக்கும் தயார் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன், ஐக்கிய ராச்சியம் வர்த்தகத் தொடர்பு ஒப்பந்தம் செய்துகொள்வதிலிருக்கும் முக்கிய இடைஞ்சலாக மீன்பிடித்தல் உரிமைகள் குறிப்பிடப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளில் தனது பொருட்களை விற்பனை செய்ய உரிமைகள் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் ஐக்கிய ராச்சியத்தின் நீரெல்லைக்குள் ஐரோப்பிய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகள் கொடுக்கப்படவேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு கேள்வியாகும்.

இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பாகமாக இருந்துவரும் ஐ.ராச்சியத்தில் ஐரோப்பிய நாடுகளின் மீனவர்கள் தாராளமாக மீன்பிடித்தல் அனுமதிக்கப்பட்டு வந்தது. பிரிவினையின் பின்னால் அதை அனுமதிக்க ஐ.ராச்சியம் தயாராக இல்லை. இந்தக் கேள்வி நீண்ட காலமே இரண்டு பகுதியினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டையாக இருந்தது.

கடைசிப் பேச்சுவார்த்தை நாளாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஞாயிறன்று அவை முறிவடையுமானால் ஐரிஷ் கடலிலும், ஆங்கிலக் கால்வாயிலும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட நான்கு கடற்படைப் போர்க்கப்பல்கள் பாதுகாப்புக்காக ரோந்து செல்லும். அதைத்தவிர உதவுவதற்காக இராணுவ ஹெலிகொப்டர்களும் 14,000 இராணுவ வீரர்களும் தயாராவார்கள்.

ஐரோப்பிய நாட்டு மீனவர்கள் தெரிந்தோ தெரியாமலோ வழக்கம்போல் ஐ.ராச்சிய நீர்ப்பரப்பினுள் மீன்பிடிக்க ஆரம்பித்து அதனால் இரண்டு பகுதியாருக்கும் தர்க்கங்களும், மோதல்களும் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் இரண்டு சாராரிடையேயும் நிலவிவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *