துருக்கியின் முதலாவது தெரிவு சீனாவின் கொவிட் 19 தடுப்பு மருந்து.

தனது நாட்டின் 60 மில்லியன் மக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுப்பதாகத் துருக்கி அறிவித்திருக்கிறது. அதற்கான தேவைகளைத் தயார் செய்துகொண்ட பின்பு டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் அது ஆரம்பிக்கப்படும்.

18 வயதுக்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள்,  ஏற்கனவே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்குள் சுகமானவர்கள் ஆகிய சுமார் 25 மில்லியன் பேர்கள் தவிர்ந்த துருக்கியின் 83 மில்லியன் பேருக்குத் தடுப்பு மருந்து வழங்கப்படும். கொரோனாத் தொற்றால் பாதிப்படைந்தார்களா என்று தெரியாதவர்களுக்கும் மருந்து வழங்கப்படும்.

முதலாவதாக வரும் 20 மில்லியன் பேருக்கான மருந்து (Sinovac) 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மருத்துவ சேவையாளர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்த துருக்கியின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பெஹ்ரெட்டின் கோச்சா, எல்லோருக்குமே இது இலவசமாக வழங்கப்படும். தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வது எவருக்கும் கட்டாயமாக்கப்படாது என்றும் உறுதிப்படுத்தினார்.

நான்கு படிகளாக நடத்தப்படவிருக்கும் தடுப்பு மருந்து விநியோகத்தின் இரண்டாவது கட்டம் பெப்ரவரி மாதத்தில் மேலும் 10 மில்லியன் பேருக்கான மருந்து கிடைத்தவுடன் நடக்கும். சீனாவின் தடுப்பு மருந்தைத் தவிர Pfizer, AstraZeneca ஆகிய நிறுவனங்களுடனும் தொடர்பு கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அவைகளைத் தவிர ரஷ்யாவின் மருந்து நம்பத்தகுந்தது என்பது தெரியவருமாயின் அதுவும் கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *