பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரை தன்னிஷ்டப்படி நடக்கும்படி மிரட்டிய சீன ராஜதந்திரி.

சுமார் ஒரு தசாப்தமாக ஐரோப்பியக் கடல் போக்குவரத்துத்துறையில் ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை எடுத்துவரும் சீனா பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சரின் நேர்காணல் பற்றிய மிரட்டலொன்றை விடுத்திருக்கிறது. அவ்விடயம் இரண்டு நாடுகளுக்குமிடையே ராஜதந்திர மனக்கசப்பை உண்டாக்கியிருக்கிற்து. 

பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஹதீஜா லபீப் [Hadja Lahbib] கொடுத்த பேட்டியொன்றில்  “வியாபாரப் போக்குவரத்துக்காகச் சீனா பாவிக்கும் கப்பல்கள் ஆயுதத்தளபாடங்களுடன்  போர்க்கப்பல்களாக மாற்றப்படக்கூடியவை,” என்று சீனர்கள் ஐரோப்பிய நாட்டுப் போக்குவரத்துத் துறைமுகங்களில் காலூன்றிக் கைப்பற்ற முயற்சிப்பதைத் தடுப்பது பற்றி எச்சரிக்கும்போது குறிப்பிட்டிருந்தார். 

அதையடுத்து சீனாவின் ராஜதந்திர அதிகாரி பெல்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு, “அமைச்சர் அதுபோன்ற பொய்களை நம்பலாகாது, குறிப்பிட்ட பேட்டியில் சொன்னதை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என்று கண்டிப்பாகக் கோரினார். 

சீனாவுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையே நடந்துவரும் துறைமுகங்கள் மூலமான போக்குவரத்தும், வியாபாரங்களும் பெல்ஜியத்துக்கு மிகவும் இலாபகரமானவை என்று சீன ராஜதந்திரி சுட்டிக் காட்டியிருந்தார். தொடர்ந்தும் பெல்ஜியம் அந்த இலாபகரமான வியாபாரத்தைப் பாதுகாக்கவேண்டுமானால் பேட்டியிலிருக்கும் குறிப்பிட்ட கூற்று வாபஸ் வாங்கப்படவேண்டும் என்றும் மிரட்டினார்.   

ஐரோப்பிய நாடுகள் தாம் சீனாவிடம் பெரும்பான்மையான வியாபாரங்களுக்குத் தங்கியிருக்க வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கிறார் அமைச்சர் ஹதீஜா லபீப். பெல்ஜியம் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் சீனாவின் சமீபகால ஆக்கிரமிப்பு அரசியலைக் கவனித்துப் பெரும் சஞ்சலம் ஏற்பட்டிருக்கிறது. 

சில மாதங்களின் முன்னர் சுவீடன் நாட்டின் முக்கிய துறைமுகம் ஒன்றை வாங்குவதற்குச் சீனா செய்த முயற்சி முறியடிக்கப்பட்டது. சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகக் குறிப்பிட்ட துறைமுகம் இருந்த நகரத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அதை வாங்குவதற்கு சீன அரசின் நிறுவனம் அனுமதி பெற்றிருந்தது. கடைசி நிமிடத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அது உசிதமானது அல்ல என்று காரணம் காட்டி சுவீடன் அரசு அந்த வியாபாரத்தை நிற்பாட்டிவிட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *