மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பிரேசிலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதியை வெற்றிகொண்டார் லூலா டா சில்வா.

ஞாயிற்றுக்கிழமையன்று பிரேசிலில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்கெடுப்பில் லூலா டா சில்வா புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அவர் 51 % விகித வாக்குகளையும் பதவியிலிருக்கும் பொல்சனாரோ 49% விகித வாக்குகளையும் பெற்றனர். 1980 களில் பிரேசிலில் ஜனநாயகம் மீண்டும் ஆட்சிமுறையாக்கப்பட்ட பின்னர் ஒரு தேர்தலில் வேட்பாளர்கள் இந்த அளவு மிகக்குறைந்த வாக்குகளால் வெற்றிபெற்றதில்லை.

சுமார் ஒரு வருட காலத்துக்கும் அதிகமாகவே பதவியிலிருக்கும் ஜனாதிபதி நாட்டின் தேர்தல் முறை, நீதித்துறை ஆகியவற்றைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். தேர்தல் முறையால் தான் ஏமாற்றப்பட்டுத் தனது வெற்றியை லூலா டா சில்வாவும் இடதுசாரிகளும் பறித்துக்கொள்ளக்கூடும் என்று பல தடவைகள் என்று அவர் பல தடவைகள் தனது ஆதரவாளர்களிடையே கூறியிருந்தார். அதனால், அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் போல பிரேசிலில் பொல்சனாரோ ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம், பாராளுமன்றத்தைத் தாக்கலாம் என்ற பயம் தேர்தல் காலம் முழுவதும் நிலவிவந்தது.

பழமைவாதியும், தேசியவதியுமான பொல்சனாரோ காலநிலை மாற்றம் அதன் விளைவுகள் போன்றவற்றை நம்பாதவர். அமெசான் காடுகளை அழித்து பிரேசிலின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்ற உறுதியுடன் செயற்பட்டு வந்தவர். அதன் காரணமாக அங்கே வாழும் பிரேசிலின் பழங்குடியினரை அவர்களின் வாழுமிடங்களிலிருந்து துரத்திவிட்டு கனிமங்களுக்காகச் சுரங்கங்களைத் தோண்டும் நிறுவனங்களுக்குக் காட்டை விற்றுவந்தார்.

பிரேசிலின் தேர்தல் ஆணையம், பாராளுமன்றத்தின் இரண்டு சபைகள், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியோர் லூலா டா சில்வாவின் தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொண்டு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள். பொல்சனாரோவோ இதுவரை தேர்தல் முடிவுகள் பற்றி எந்தவித அசுமாத்தமும் இன்றியிருக்கிறார். தனது உதவியாளர்கள் மூலம் தான் உறங்கப்போய்விட்டதாகச் செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.

வெற்றிபெற்ற லூலா டா சில்வா தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது தனது நாட்டில் எவரும் உணவின்றி வாடலாகாது என்ற நிலைமையை உண்டாக்குவதே  தனது முதலாவது நடவடிக்கையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *