தம்மை ஆள வலதுசாரிகளையும், தேசியவாதிகளையும் தேர்ந்தெடுத்தார்கள் இத்தாலிய வாக்காளர்கள்.

செப்டெம்பர் 26 ம் திகதியன்று இத்தாலியில் நடந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே வலதுசாரிக்கட்சி மற்றவர்களைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதாக முதல்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 26 % வாக்குகளைப் பெற்ற ஜியோர்ஜியா மெலோனி, “இத்தாலியர்கள் எங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள், அவர்களை நாம் ஏமாற்றப்போவதில்லை,” என்று தனது வெற்றியுரையில் குறிப்பிட்டார். அவருடன் சேர்ந்து ஆளப்போகும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிலொன்று குடியேறிகளை விரும்பாதவர்கள், மற்றது மேலும் தீவிரமான பழமைவாதிகளாகும். அம்மூவரும் சேர்ந்து சுமார் 44 % வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

தனவந்தர் பெர்லொஸ்கோனியின் கட்சியான Forza Italia இந்தத் தேர்தலில் மீண்டும் ஆளப்போகும் கூட்டணியில் இருக்கிறது. நாட்டின் அரசியல் கோமாளி என்று கருதப்பட்ட, 1994 – 1995, 2001 – 2006, 2008 – 2011 ஆகிய அரசாங்கங்களில் பிரதமராக 9 வருடம் இருந்த சில்வியோ பெர்லொஸ்கோனி கணக்கற்ற ஊழல்கள், கற்பழிப்பு போன்றவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டவர். 

இத்தடவை தேர்தலில் நாட்டின் 51 மில்லியன் வாக்குரிமை உள்ளவர்களில் 65 % பேர் வாக்களித்திருக்கிறார்கள்.  1948 இல் இத்தாலி பாராளுமன்றத் தேர்தலை ஆரம்பித்ததிலிருந்து வாக்களித்தோர் விகிதம் மிகக் குறைவாக இருப்பது இத்தேர்தலிலேயே ஆகும். அவர்களில் 2.6 மில்லியன் முதல் தடவை வாக்காளர்கள் ஆகும். வெளிநாடுகளில் வாழும் 4.7 மில்லியன் வாக்காளர்கள் தமது வாக்கைப் பாவித்திருக்கிறார்கள். அது ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய தொகையாகும்.

கடந்த தேர்தலில் இத்தாலியை ஆண்ட அரசியல்கட்சிகளையெல்லாம் கோமாளிகளாகச் சித்தரித்துக் கேவலப்படுத்திப் பெருமளவு வாக்குகளை வென்ற ஐந்து நட்சத்திர முன்னணிக் கட்சியை மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் 30 % வாக்குகளைப் பெற்றிருந்த அவர்கள் இம்முறை 15 % ஐயே பெறுகிறார்கள். 

எதிர்க்கட்சி அணியில் அதிக ஆதரவைப் பெற்றிருக்கிறது முன்னாள் பிரதமரின் சோசியல் டெமொகிரடிக் கட்சி. 

வெற்றிபெற்ற அணியின் முக்கிய கட்சியான இத்தாலியர்களின் சகோதர் கட்சித் தலைவி ஜியோர்ஜியா மெலோனி பிரதமர் பதவியேற்றால் அவரே இத்தாலியின் முதலாவது பெண் பிரதமராவார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *