ஒரு வருடம் தாமதமாக யூரோ 2020 ரோமில் கால் பங்கு நிறைந்த அரங்கில் ஆரம்பமானது.

கடந்த வருடத்தில் நடந்திருக்கவேண்டிய யூரோ 2020 கொரோனாத் தொற்றுக்களின் மோசமான பரவலால் இவ்வருடத்துக்குப் பின்போடப்பட்டது. கடந்த ஜூன் 12ம் திகதி ஆரம்பித்திருக்கவேண்டிய ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிப் பந்தயங்கள் ஜூன் 11 ம் திகதி வெள்ளியன்று இத்தாலியில் ரோமில் ஆரம்பித்தது. ஒலிம்பிகோ மைதானத்தில் பிரபல பாடகர் அந்திரியா புச்செல்லியின் இசையுடன் அது ஆரம்பமானது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது ஐரோப்பிய நாடுகள் வேகமாகத் தமது மக்களுக்குத் தடுப்பூசிகளைப் போட்டதால் தொற்றுக்கள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. எனவே ஆரம்பித்திருக்கும் உதைபந்தாட்டப் பந்தயங்களைக் காண்பதற்கு அரங்கங்களில் கட்டுப்பாடுகளுடன், ஓரளவு பெரிய அளவின் விசிறிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெள்ளியன்று ஆரம்ப நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த இத்தாலி – துருக்கி போட்டியில் இத்தாலி 3 – 0 என்ற வித்தியாசத்தில் வெற்றியைக் கைப்பற்றியது. 

சனியன்று நடந்த 3 போட்டிகளில் பெரிதாகப் பேசப்பட்ட சம்பவங்கள் ரஷ்யா மீதான பெல்ஜியத்தின் 3 – 0 வெற்றியும், டென்மார்க் மீதான பின்லாந்தின் 1 – 0 வெற்றியும் எனலாம். 

சிகப்பு பேய்கள் என்றழைக்கப்படும் பெல்ஜியத்தின் உதைபந்தாட்டக் குழு சமீபத்தில் விளையாடிய போட்டிகளில் மிகத் தரமாக விளையாடிப் பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. கடைசியாக விளையாடியிருந்த 10 போட்டிகளிலும் வென்றார்கள். 24 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருக்கிறார்கள். ரஷ்யாவும் உதைபந்தாட்டத்தில் மிகவும் ஆர்வமுள்ள நாடாகும். அவர்களும் ஒரு பலமான குழுவுடன் தமது நாட்டில் நடந்த அந்தப் போட்டியில் பங்கெடுத்தார்கள். விளையாட்டு ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரஷ்ய வீரரொருவர் தவறவிட்ட பந்தை லாவகமாக வலைக்குள்ளே அடித்து ரொமேலு லுக்காக்கு தனது குழுவின் வெற்றிக்குப் பாதையமைத்தார்.

உடனடியாக கமராவை நோக்கி ஓடிப்போன லுக்காகு இண்டர் மிலான் குழுவில் தன்னுடைய சகாவான கிரிஸ்டியன் எரிக்ஸனின் பெயரைச் சொல்லி “கிரிஸ், கிரிஸ் ஐ லவ் யூ” என்றார். கொபன்கேகனில் விளையாடப்பட்டுக்கொண்டிருந்த டென்மார்க் – பின்லாந்துப் போட்டியின்போது திடீரென்று கிரிஸ்டியன் எரிக்ஸன் மாரடைப்பு ஏற்பட்டுத் துவண்டு விழுந்திருந்தார். 

சரித்திரத்தில் முதல் தடவையாக யூரோ பந்தயத்தில் விளையாட வந்திருந்த பின்லாந்து குழு நீண்ட காலமாகவே அப்பந்தயத்தில் பழம் தின்று கொட்டை போட்டிருந்த டென்மார்க்கை 1 – 0 வித்தியாசத்தில் வென்று அங்கே வந்திருந்த 3,000 பின்லாந்து விசிறிகளையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும், கிரிஸ்டியன் எரிக்ஸன் சுகவீனம் காரணமாகக் கொண்டாட்டங்கள் மந்தமாகவே இருந்தன என்று குறிப்பிடப்படுகிறது.

விளையாடப்பட்ட மூன்றாவது போட்டியில் சுவிஸ் – வேல்ஸ் போட்டி 1 -1 ஆகியது. 

ஞாயிறன்று கிரவேஷியாவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. வெம்பிளியில் அவர்கள் தமது முதல் மூன்று போட்டிகளையும் விளையாடவிருக்கிறார்கள். அரையிறுதிப் போட்டிகள், கடைசியில் கோப்பைக்கான போட்டி ஆகியவையும் அங்கேயே நடைபெறும். சொந்த நாட்டில் விளையாடுவது அவர்களுக்கு ஒரு அனுகூலமாக அமையும் என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *