ஸியோனா சானா, உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் தனது 76 வயதில் காலமானார்.

ஒன்று, இரண்டு, ஐந்து அல்ல 39 மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டு 94 பிள்ளைகளுக்குத் தந்தையானவர் ஸியோனா சானா. இந்தியாவில் மிஸோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர். இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி ஆகியவைகளைக் கொண்டிருந்த அவர் ஜூன் 7 ம் திகதியிலிருந்து கடும் சுகவீனத்தால் எதையும் உட்கொள்ள முடியாமலிருந்தார். மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களுக்கு சட்டத்துக்கு எதிரான விடயமான ஒன்றுக்கு மேற்பட்ட கல்யாணங்களைச் செய்துகொள்வது ஸ்யோனா சானாவுக்கு முடியுமாயிருக்கக் காரணம் அவர் கிறீஸ்தவ மதங்களின் பிரிவொன்றைத் தனது தந்தையின் பெயரால் ஸ்தாபித்து அதற்குத் தலைவராக இருந்ததாகும். அதன் பெயர் சானா பௌல் என்பதாகும்.

மற்றைய கிறீஸ்தவ புரொட்டஸ்தாந்துச் சமயங்களைப் போலவே தன் சமயமும் என்றும் ஆனால் பல கல்யாணங்களைச் செய்வது அதில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஸியோனா சானா தெரிவித்தார். அவரது வித்தியாசமான வாழ்க்கைமுறை காரணமாகச் சொந்தக் கிராமத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். வேறொரு நகருக்கு விலகிய அவர் “புதிய தலைமுறையின் மாளிகை” என்ற பெயரில் பல மாடிக் கட்டடமொன்றைக் கட்டி அங்கே தனது மனைவியர், குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

தச்சு வேலைகள், அலுமினியப் பொருட்களைச் செய்வதன் மூலம் ஸியோனா சானா பிழைத்து வந்தார். பெரிய குடும்பமான அதற்குத் தேவையான பாடசாலை, தளபாடங்கள், விவசாயம், பண்ணைகள் மற்றும் உபகரணங்களை அவர்கள் வாழ்ந்த கட்டடத்துக்குள்ளேயே உண்டாக்கிக்கொண்டு ஆண்கள் அவற்றைக் கவனித்துக்கொண்டார்கள். பெண்கள் உணவு, தோட்டங்களைக் கவனித்து வீட்டையும் பராமரித்து வந்தார்கள்.

220 இறாத்தல் அரிசி, 132 இறாத்தல் கிழங்கு, 30 கோழிகள் அவர்களின் ஒரு நேர உணவுக்குச் செலவாகியதாகக் குறிப்பிடப்படுகிறது. 

ஸியோனாவுக்குப் 14 மருமகள்மாரும், 33 பேரப்பிள்ளைகளும், ஒரு பூட்டப்பிள்ளையும் இருந்தார்கள். அவரது மதத்தில் சுமார் 400 பேர் இருந்தார்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *