நேப்பிள்ஸ் நகர மருத்துவமனையருகில் உட்குளியொன்று வாகனங்களை விழுங்கியது.

இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரிலிருக்கும் ஒஸ்படேல் டெல் மாரெ என்ற மருத்துவமனையின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் திடீரென்று ஏற்பட்ட உட்குளியொன்று (sinkhole) அங்கிருந்த வாகனங்களை உள்ளே விழுங்கியது. அது சுமார் 2,000 சதுர மீற்றர் அளவிலான 20 மீற்றருக்கும் ஆழமானது என்று குறிப்பிடப்படுகிறது.

காலை ஏழு மணியளவில் நடந்த அந்த விபத்தையடுத்து உடனடியாக மீட்புப் படையினர் தருவிக்கப்பட்டு, மோப்ப நாய்களின் உதவியுடன் அதனுள் எவரும் மாட்டிக்கொண்டார்களா என்று தேடுதல் நடத்தினார்கள். எந்த ஒரு மனிதரும் காயமடையவில்லை, உயிரிழக்கவில்லையென்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. 

கொவிட் 19 நோயாளிகளைப் பராமரிக்கும் அந்த மருத்துவ நிலையத்தில் இந்த விபத்தால் மின்சாரம் அற்றுப்போனதால் அவர்கள் தற்காலிகமாக வேறு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார்கள். 

இப்படியான உட்குழிகள் (sinkhole)திடீரென்று உண்டாவது நேப்பிள்ஸ் நகருக்குப் புதியதல்ல. 2009 இல் ஒரு தேவாலயத்தினுள் உண்டாகிய உட்குழி நிலமட்டத்திலிருந்தவைகளை 2 மீற்றர்களுக்குக் கீழே விழவைத்தது. அத்தேவாலயம் 2017 இல் 1.5 மில்லியன் எவ்ரோ செலவில் புதுப்பிக்கப்பட்டபின் திறக்கப்பட்டது.

உலகப் பாரம்பரியக் கட்டடங்கள் என்று பாதுகாக்கப்படும் சுமார் 500 சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களைக் கொண்ட நேப்பிள்ஸில் 9 தேவாலயங்களில் இதுபோன்ற உட்குழிகள் உண்டாவதற்கான ஆபத்து மிக அதிகமென்றும் மேலும் 57 தேவாலயங்களில் மிதமான ஆபத்து இருப்பதாகவும் புவியியலாளர்களால் செய்யப்பட்ட ஆராய்ச்சியொன்று குறிப்பிடுகிறது. 

அந்த ஆராய்ச்சியில் 1870 – 2010 கால இடைவெளியில் நேப்பிள்ஸ் பகுதியில் 190 உட்குழி ஆபத்துக்கள் உண்டாகி அதன்மூலம் வரலாற்றுக்காலக் கட்டடங்கள் அழிந்ததுமன்று சில உயிர்களும் இழக்கப்பட்டிருக்கிறதாகத் தெரியவருகிறது.  

மிதமான பாறை நிலப்பரப்பின் மீது ஏற்படும் மாற்றங்களும், தொடர்ந்த மழையும், மனிதர்களின் நடவடிக்கைகளும் இதுபோன்ற இயற்கை அனர்த்தத்தை உண்டாக்குகிறது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அத்துடன் சரித்திர காலத்தில் இப்பகுதியில் நிலத்துக்குக் கீழே பாதாள நிலவறைகள், மயானங்கள், தொழிற்சாலைகள்,  இரகசியப் பாதைகள் போன்ற பலவும் இருந்தன. அதனால் நிலமட்டம் காலப்போக்கில் பலவீனமாகிறது. நிலத்தின் மீது இதைப் பற்றிய ஆராய்வின்றிக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன அதனால் தரை மேலும் பலமற்றதாகிறது. அத்துடன் இயற்கையின் மாற்றங்களால் இந்தப் பிராந்தியத்தில் புவியியல் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. இவைகளெல்லாம் சேர்ந்தே இப்படியான ஆபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *