“போரில் இறந்தோரது நினைவுகளைஅழிப்பதும் மற்றோர் இன அழிப்பே!” -கனடா பிரம்டன் நகரபிதா.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடம் புல்டோசர் கொண்டு இடித்தழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கனடாவில் கண்டனங்கள் வெளியாகி உள்ளன.

“போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் நினைவுகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கை அரசினது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் இன்னொரு வடிவமே” என்று கனடா ஒன்ராரியோ பிரம்டன் நகர பிதா பற்றிக் வோல்ரர் பிறவுண் (Patrick Walter Brown) தெரிவித்திருக்கிறார்.

போர் நினைவிடம் அழிக்கப்படுவதை கனடாவும் சர்வதேச சமூகமும் தலையிட்டுத் தடுக்கவேண்டும் என்று தனது ருவீற்றர் பதிவில் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். மக்களின் வரலாற்றை அழித்துத் துடைப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே என்று குறிப்பிட்டிருக்கின்ற கனடா பிரம்டன் (Brampton) நகர கவுன்சிலர் ஹர்கிரத் சிங் (Harkirat Singh), யாழ்ப்பாணச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையை தனது ருவீற்றர் பதிவில் வெளியிட்டிருக்கிறார்.

கனடாவின் அரசியல்வாதியும் ஒன்ராரியோ மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினருமாகிய விஜய் தணிகாசலம் (Vijay Thanigasalam) இலங்கை அரசின் செயலை வன்மையாகக் கண்டித்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.விஜய் தணிகாசலம் ஸ்காபுரோ றூஷ் பார்க் (Scarborough—Rouge Park) பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்யும் கனடாவின் தமிழ் அரசியல் பிரமுகர் ஆவர், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இரவோடு இரவாக இடித்தழித்த செயல் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொதிப்பை மேலெழச் செய்துள்ளது.

அதற்கு எதிராக சமூகவலைத் தளங்களில் கண்டனப் பதிவுகள் வேகமாகப் பரவி வருகின்றன.புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பலவும் நினைவிடம் அழிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

(படம் :முள்ளிவாய்க்கால் போர் நினைவிடம், யாழ். பல்கலைக்கழகம்)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *