அமெரிக்க ஜனாதிபதியின் “நாட்டின் நிலவரம்” பற்றிய உரைக்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உட்புகுந்திருந்தது.

State of the Union என்றழைக்கப்படும், நாட்டு மக்களுக்கு நாட்டு நிலபரத்தை அரசு எங்ஙனம் எதிர்கொள்ளவிருக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி விபரிக்கும் வருடாந்தர உரை ஒரு முக்கிய பாரம்பரியமாகும். பாராளுமன்றத்தின் முன்னர் செவ்வாயன்று  அமெரிக்க ஜனாதிபது ஜோ பைடன் முன்வைத்த உரையில் எதிர்பார்த்தது போலவே ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப்போர் உள் நுழைந்திருந்தது.   

“ஆறு நாட்களுக்கு முன்பு, விளாடிமிர் புடின் சுதந்திர உலகத்தைத் தான் நினைத்தபடி அசைத்து அதை வலுக்கட்டாயமாகத் தன்னிஷ்டப்படி நடக்க வைக்கலாம் என்று முயற்சித்தார். அவருடைய கணக்குத் தவறாகிவிட்டது.  உக்ரைனுக்குள் நுழைந்து உலகை மண்டியிட வைக்க முடியும் என்று நினைத்தார். மாறாக, அவர் உக்ரேனிய மக்களின் ஒன்றிணைந்த சக்தியை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று,” என்று அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்பு ஜோ பைடன் குறிப்பிட்டார்.

“வெளிச்சமானது இருளை வெல்லும்,” என்று உக்ரேனிய ஜனாதிபதி ஸெலின்ஸ்கியின் உரையிலிருந்து ஜோ பைடன் மேற்கோள் காட்டிப் பேசியபோது எதிர்க்கட்சியினரான ரிபப்ளிகன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பாராளுமன்றமெ எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பரித்தது. அமெரிக்கப் பாராளுமன்றத்தில் இரண்டு கட்சியினரும் ஒன்றிணைந்து கைதட்டி வரவேற்பது சாதாரணமாகக் காண முடியாத விடயமாகும்.

ஐரோப்பா எடுத்த நடவடிக்கை போலவே அமெரிக்காவும் தனது வான்வெளியை ரஷ்யப் பாவனைக்குத் தடைசெய்தது. சகல உலக நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா 60 மில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகச் சந்தைக்குப் பாவனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. அதன் நோக்கம் ரஷ்யாவின் எரிசக்தி சந்தைக்கு வரத் தடைப்படுத்தப்பட்டிருப்பதால் உலக எரிபொருள் விலைகள் கட்டுப்பாடின்றி உயராமல் இருப்பதாகும். 

சாள்ஸ் ஜெ. போமன்