வரவிருக்கும் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் பகிர்ந்து கொடுக்கப்படும் நிலைமை வரலாம்.

இவ்வருடக் குளிர்காலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு சோதனைக்காலமாக ஆகலாம் என்ற எச்சரிக்கை பலரால் கொடுக்கப்பட்டது. குளிர்காலமானது நீளமாகவும், கடும் குளிராகவும் இருக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் எரிபொருளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டிவரலாம் என்கிறார் சர்வதேச எரிசக்தி அமைப்பின் நிர்வாகி பத்தி பிரோல். 

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தண்டிக்க ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் எரிபொருளை வாங்குவதை நிறுத்தியிருப்பது அறிந்த விடயமே. அதன் விளைவாக, எரிபொருள் விலையுயர்வும், பற்றாக்குறையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன. அத்துடன் சீனா தனது கொரோனாக் கட்டுப்பாடுகளை நிறுத்திக்கொண்டு மீண்டும் இயல்பு நிலைமைக்கு வருவதும் கூட எரிபொருளுக்கான தேவையை அதிகரித்து அதன் மூலம் தட்டுப்பாட்டை அதிகரிக்கலாம் என்கிறார் பத்தி பிரோல்.

இதுபற்றி ஜெர்மனிய எரிசக்தி அமைச்சர் முன்னரே குறிப்பிட்டிருக்கிறார். ஜெர்மனியில் எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமையில் நாட்டின் ஒரு பகுதி தொழிற்சாலைகளுக்கான எரிசக்தி முதல் கட்டமாகப் பகிர்ந்து கொடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். டென்மார்க்கும் அதே எச்சரிக்கையை விட்டிருக்கிறது. சாதாரண மக்களுக்கான எரிபொருள் தேவையே முதன்மைப்படுத்தப்படும் என்று குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *