நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய – உக்ரேன் பேச்சுவார்த்தைகள் வியாழன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் ரஷ்யா – உக்ரேன் சுற்றுப்பயணத்தால் பயன் ஏற்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் போர் மேகங்களைக் களையச் சாத்தியம் உள்ளதாக, அவர் இரண்டு நாட்டுத் தலைவர்களையும் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல இன்று வெளியாகியிருக்கும் செய்திகள் அவர்களிடையே இருந்த முரண்பாடுகளால் நிறுத்தப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிவிப்பைக் கேட்டதும் உக்ரேன் தலைமை ரஷ்யாவுக்குப் பயந்துபோய் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது என்று ஒரு பகுதியாரின் விமர்சனங்கள் வெளிவருவதற்கு அதிக நேரமாகவில்லை. 

ரஷ்ய எல்லையை அண்டியிருக்கும் உக்ரேனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவான குழுக்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் பகுதிகளின் எதிர்காலம் பற்றி, உக்ரேன் அரசு ஜனவரிக் கடைசியில் பாராளுமன்றத்தில் சட்டமியற்றியிருந்தது. அதன்படி, அங்கே ஆட்சியைக் கைப்பற்றி தனிக் குடியரசுகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்தியிருக்கும் லுகான்ஸ்க், டொனெஸ்க் ஆகியவை அங்கீகரிக்கப்படமாட்டாது. மேலும், உக்ரேனுக்குள் நுழைந்திருக்கும் ரஷ்யப் படைகள் ஆக்கிரமிப்புப் படைகளே என்றும் குறிப்பிடப்பட்டது. 

ரஷ்யாவை மிகவும் கொதிக்கவைத்த அந்தச் சட்ட மாற்றங்களைத் திருப்பியெடுக்கப் போவதாக உக்ரேன் அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை விமர்சிப்பவர்களுக்கு, “அவை திருப்பியெடுக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய கூட்டுறவு மையத்தின் ஆலோசனையின் பேரில் ஆகும். அச்சட்ட வரிகளில் சில மாற்றங்கள் செய்வதற்கே,” என்கிறது உக்ரேன் அரசு. 

அந்தச் சட்டம் பின்வாங்கப்பட்டதை பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் வரவேற்றிருக்கிறார். அந்தச் சட்டத்தில் இருக்கும் வார்த்தைகள் பிரான்ஸ், ஜேர்மனியின் உதவியுடன் 2014 இல் உருவாக்கப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீறுவதாக மக்ரோன் சுட்டிக் காட்டினார். 2014 இல் உக்ரேனின் கிரிமியா பிராந்தியத்துக்குள் நுழைந்து ரஷ்யா அதைத் தன்வசப்படுத்தியது. அதையடுத்துத் தொடர்ந்த போரில் உக்ரேன் முழுவதுமாகப் பறிபோகும் நிலை ஏற்பட்டிருந்தது. அப்போரை நிறுத்தவே மின்ஸ்க் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

சாள்ஸ் ஜெ. போமன்