சுவீடன், நோர்வே நாடுகளின் குடும்ப நல அலுவலர்கள் முஸ்லீம்களின் பிள்ளைகளைக் கடத்துவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் திட்டமிட்ட பிரச்சாரங்களைச் செய்துவருகின்றன.

சர்வதேச ரீதியில் சமீப காலத்தில் நோர்வே, சுவீடன் நாடுகள் பற்றித் திட்டமிட்ட எதிர்மறைப் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு வருவதாக இரண்டு நாடுகளின் உளவுத் துறைகளும், பத்திரிகையாளர்களும் குறிப்பிடுகிறார்கள். படத் துணுக்குகள், செய்தியின் பகுதிகளைப் பொய்களுடன் சேர்த்து இந்த நாடுகளின் குடும்ப நல அலுவலகர்கள் திட்டமிட்டு முஸ்லீம் குடும்பங்களிலிருந்து பிள்ளைகளைப் பறித்துச் செல்வதாகப் பல நாடுகளிலிருந்து சில குறிப்பிட்ட ஊடகங்கள் மூலம் கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

கடத்தப்படும் பிள்ளைகளை விற்பதற்கும், விபச்சாரம் செய்வதற்கும் குடும்ப நல சேவையினர் பயன்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

சுவீடன், நோர்வே நாடுகளின் குடும்ப நலச் சேவையினர் எப்படித் திட்டமிட்டு அந்தக் கடத்தல்களைச் செய்து வருகிறார்கள் என்று பல மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட ஊடகங்களில் படங்கள் செய்திகளில் பலர் வாக்குமூலங்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஊடகங்களைக் கண்காணித்து அவர்களின் பின்னணியை ஆராய்ந்து வருகிறது பாதுகாப்பு அமைச்சின், மனோதத்துவ ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான அமைப்பு.

வேண்டுமென்றே இந்த நாடுகளின் அரசியல் கோட்பாடுகளையும், சமூகக் கோட்பாடுகளையும் திரிபுபடுத்து நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஊடகங்களின் பின்னணியில் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புக்கள் ஈடுபட்டு வருவதை அவ்வகையான ஆராய்வு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது பாதுகாப்பு அமைச்சு. அதே போன்ற திட்டமிட்ட எதிர்மறைப் பிரச்சாரங்களை ஆராந்த நோர்வேயின் பத்திரிகையாளர் அமைப்பொன்று அதையே தெரிவிக்கிறது. 

குறிப்பிட்ட பொய்களைப் பரப்பிவரும் ஊடகங்களின் கருத்துப் பகிரும் பகுதியில் எழுதுகிறவர்கள் அந்த நாடுகள் மீது தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தவும், குடும்ப நல அதிகாரிகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்தவும் தூண்டி வருகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் சமீப வாரங்களில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக இரண்டு நாடுகளின் உளவுத் துறைகளும் தெரிவிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்