மாமனிதர் துரைராஜா சிலை – திருநெல்வேலி சந்தியில் நிறுவ தீர்மானம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவின் உருவச் சிலையை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவ தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் செப்டெம்பர் மாதம் 18ம் தேதி வியாழக்கிழமை இன்று , நடைபெற்ற மாதாந்த சபைக் கூட்டத்தில் நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்தை அறிவித்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ,
“போலிகள் அதிகரித்துள்ள இன்றைய தேசத்தில், போலியின்றி வாழ்ந்து, தேசப்பற்று, மனித நேயம், தமிழ் மண்ணிற்கும் மக்களுக்கும் தன்னலமற்று பணியாற்றியவர் துரைராஜா. அவரது பங்களிப்புகள் எமது இளைஞர் தலைமுறைக்குப் பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த உயரிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.
சிலை நிறுவுவதற்கான இடமாக திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள பகுதி பொருத்தமானதாக சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது
