பாலைவனத்தில் காளான் தோண்டுபவர்களைத் தாக்கி 60 பேரைக் கொன்றனர் ஐ.எஸ் தீவிரவாதிகள்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஹொம்ஸ் பிராந்தியத்தில் காளான் வேட்டைக்குச் சென்றவர்களைத் தாக்கி சுமார் 60 பேரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொன்றிருப்பதாகச் சிரியாவின் செய்திகள் குறிப்பிடுகின்றன. உள்நாட்டுப் போரால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் வறிய மக்கள் பாலைவனப் பகுதிகளில் கிடைக்கும் குறிப்பிட்ட காளான் வகையைத் தோண்டியெடுத்துப் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். சுன்னி இஸ்லாமிய மார்க்கத் தீவிரவாதிகளான காலிபாத் [ஐ.எஸ்] இயத்தினரே அந்தத் தாக்குதலை நடத்தியாக அரசு குற்றஞ்சாட்டுகிறது. 

இதே போன்று காளான் தோண்டுபவர்கள் மீதான  தாக்குதல்கள் சமீப காலத்தில் ரக்கா, அபு கமால், ஹொம்ஸ், அல் மயாதின், டிர் எஸ் சோர் ஆகிய பகுதிகளில் அதே தீவிரவாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. காளான்கள் கிடைக்கும் பகுதிகளில் கண்ணி வெடிகளை வைத்துவருவதன் மூலம் அப்பகுதியில் வாழும் சுன்னி மார்க்கத்தவரல்லாத வறியவர்களைக் கொன்றொழித்து வருவது அதிகரித்திருக்கிறது.

நிலத்துக்குள் கீழ் மரங்களின் வேர்களை அண்டி வாழும்[ truffle]  காளான்கள் மற்றைய ரகங்களை விட விலைமதிப்புள்ளவை. சிரியாவின் பாலைவனப் பகுதிகளிலும் அவை காணக்கிடைக்கின்றன. அரியதாகவே அந்தக் காளான்கள் கிடைப்பதாலும், அவை விலையுயர்ந்த உணவுகளில் பாவிக்கப்படுவதாலும் கிலோவுக்கு நூற்றுக்கணக்கான டொலர்கள் விலையில் அவை விற்கப்படுகின்றன.

2021 இல் மட்டும் அப்படியான கண்ணிவெடிகளால் 241 பேர் இறந்திருப்பதாக சிரியாவில் மனித உரிமைகள் அமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 114 பேர் குழந்தைகளாகும். மேலும் சுமார் 15 பேர் காயமடைந்திருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *