முதல் தடவையாகப் படமொன்றுக்குத் தலையைக் காட்டிய தலிபான்களின் அமைச்சர் சிராஜுத்தீன் ஹக்கானி.
அமெரிக்காவின் “தேடப்படும் பயங்கரவாதிகள்” பட்டியலில் முக்கிய நபராக இருந்து வருபவர்களில் ஆப்கானிய உள்நாட்டு அமைச்சரும் ஒருவர். இதுவரை காலமும் எந்த ஒரு படத்திலும் தனது முகத்தைக் காட்டாமல் கவனமாக இருந்து வரும் நபராக சிராஜுத்தீன் ஹக்கானி இருப்பதால் அமெரிக்கா வெளியிட்ட தேடப்படுகிறவர்கள் பட்டியலிலும் ஹக்கானியின் படம் கையால் வரையப்பட்டதாகவே இருந்து வருகிறது. முதல் தடவையாக, சிராஜுத்தீன் ஹக்கானி காபுலில் நடந்த நிகழ்ச்சியொன்றில் தனது படத்தை எடுக்க அனுமதித்திருக்கிறார்.
ஆப்கானில் இரண்டாம் தடவையாக ஆட்சியைக் கைப்பற்ற முன்பு தலிபான்களின் அதிமுக்கிய ஆன்மீகத் தலைவராக இருந்துவரும் ஹிபத்துல்லா அகுந்ஸாதாவின் முக்கியமான மூன்று உப தலைவர்களுள் சிராஜுத்தீன் ஹக்கானியும் ஒருவராகும். ஹக்கானி சகோதரர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் தலிபான் இயக்கத்தின் பொருளாதார, வர்த்தகத் தொடர்புகளை இயக்குபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
“உங்களுடைய நம்பிக்கையைப் பெறவும், உங்களைத் திருப்திப்படுத்தவும் முதல் தடவையாக நான் நேரடியாக முகத்தைக் காட்டிப் பொது நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்கிறேன்,” என்று புதிய பொலீஸாரை அறிமுகப்படுத்தும் ஊர்வலமொன்றில் சிராஜுத்தீன் ஹக்கானி குறிப்பிட்டதாகச் செய்திகள் படங்களுடன் வெளியாகியிருக்கின்றன.
சிராஜுத்தீன் ஹக்கானியைக் கைப்பற்றக்கூடிய விபரங்களைத் தருபவர்களுக்கு 10 மில்லியன் டொலர் சன்மானம் தருவதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டிருக்கிறது. தனது பொருளாதாரப் பலத்தாலும், இராணுவத் திட்டங்களினாலும் தலிபான்கள் சார்பில் நடத்தப்பட்ட பெரும்பாலான தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னால் சிராஜுத்தீன் ஹக்கானி இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சிராஜுத்தீனைக் குறிவைத்து அமெரிக்காவினால் நடாத்தப்பட்ட பல காற்றாடி விமானத் தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்