ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட பாகிஸ்தானின் பஜாவுர் மாவட்டத்தில் ஆயுதக்குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்திருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தினரைச் சுட்டது யாரென்று குறிப்பிடாவிட்டாலும் பஜாவுர் மாவட்டத்தில் பாகிஸ்தானியத் தலிபான்கள் என்றழைக்கப்படும் தெஹ்ரிக் ஈ தலிபான் கூட்டமைப்பினர் பாகிஸ்தான் அரசுக்கெதிராகப் போராடி வருவது தெரிந்ததே.

“ஆப்கான் மண்ணிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பாகிஸ்தானியத் தலிபான்களைக் கட்டுப்படுத்தவேண்டும்,” என்று பாகிஸ்தானிய அரசு ஆப்கானியத் தலிபான்களுடன் கோரியிருக்கிறது. பாகிஸ்தானிய இராணுவத்தினர் தம்மை நோக்கிச் சுட்டவர்களில் மூன்று அல்லது நாலு பேரைக் கொன்றதாகவும் மேலும் சிலர் காயப்பட்டதாகவும் பாகிஸ்தான் குறிப்பிடுகிறது.

“ஆப்கானிஸ்தான் மண்னிலிருந்து வேறெவருக்கும் எதிராகத் தாக்குதல் நடத்துவதைத் தாம் அனுமதிக்க முடியாதென்று” காபுலைக் கைப்பற்றிய பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர்களின் தொடர்பாளர் ஸபியுல்லா முஹயீத் குறிப்பிட்டிருந்தார். 

“ஆப்கானிஸ்தானின் நிலபரத்தைக் கவனித்தால் அங்கே உண்டாகும் வன்முறை, போர் பாகிஸ்தானுக்குள்ளும் நுழையும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று பாகிஸ்தானிய இராணுவ உயரதிகாரி பபார் இப்திகார் குறிப்பிடுகிறார். 

பாகிஸ்தானியத் தலிபான்கள் தனக்குள் பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதக் குழுக்களைக் கொண்டது. அல்-கைதா இயக்கத்தினருடைய கோட்பாடுகளை ஆதரிக்கும் அவர்களுள் ஆப்கான் தலிபான்களிடம் இருந்து பிரிந்து போனவர்களும் உண்டு. தலிபான்களின் வழியை விடக் கடுமையாக இஸ்லாமிய வாழ்க்கை வழியைப் பின்பற்றவேண்டுமென்று கோருபவர்கள் பாகிஸ்தான் தலிபான்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *