காபூல் ட்ரோன் தாக்குதலில்ஆறு குழந்தைகள் மரணம்!

காபூல் நகரில் அமெரிக்கப் படைகளின் ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன் விமானம்நடத்திய ரொக்கட் தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தவர்கள் பத்துப் பேர் உயிரிழந்தனர் என்றுஅறிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் தெரிவித்த தகவல்கள் மற்றும் படங்களை காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் வெளியிட்டிருக்கிறார்.இஸ்லாமிய தேசத் தீவிரவாதிகளின் ஆப்கான் அணியைச் சேர்ந்த ஒருவர் பயணித்த வாகனம் ஒன்றின் மீது தனதுட்ரோன் விமானம் ஒன்று துல்லியமாகத்தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆனால் வீடு ஒன்றில் தரித்து நின்ற வாகனம் ஒன்றே தாக்குதலுக்கு இலக்கானது என்றும், அந்த வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட பத்துபேரே உயிரிழந்தனர் என்றும் சுயாதீனசெய்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. உயிரிழந்த குழந்தைகள் இரண்டு வயதுக்கும் 14 வயதுக்கும்இடைப்பட்டவர்கள் என்பதை பிபிசி செய்தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

முகங்களையும் உருவங்களையும் அடையாளம் காணமுடியாதவாறு சடலங்கள் கருகிக்கிடந்தன என்று உறவினர்கள் கூறியுள்ளனர். ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட கையோடு தொடராக பல குண்டுவெடிப்புகள் ஏற்பட்டன. வாகனத்தில் இருந்து வெடித்த குண்டுகளே அப்பகுதியில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அமெரிக்கப் படைககளது மத்திய கட்டளைப்பீடம் முன்னர் தெரிவித்திருந்தது. காபூல் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்துவதற்காக குண்டுகள் ஏற்றப்பட்டிருந்த வாகனத்தின் மீதேட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும்அது கூறியிருந்தது.

ஆனால் தற்போது சிவிலியன் இழப்புகள்தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்களை அடுத்துச் சம்பவம் குறித்து வெளிப் படையான விசாரணைகள் நடத்தப்படும் என்று பென்ரகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை விலக்கியுள்ள அமெரிக்கா அங்கு வான் வழியாக ட்ரோன் மூலமான புதியபோரைத் தொடுத்துள்ளது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.இஸ்லாமியத்தீவிரவாதிகள் மீதான இந்தப் புதிய போர் சிவிலியன்களது பாதுகாப்புக்குப் பெரும்அச்சுறுத்தலாக மாறிவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

🔴கடைசி விமானம் வெளியேறியது

இதேவேளை, காபூலில் இருந்து அமெரிக்கத் துருப்புகள் முற்றாக வெளியேறி விட்டதாக பென்ரகன் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை பிரான்ஸ் நேரப்படி இரவு 22.00 மணிக்கு கடைசி வீரர்களை ஏற்றிக் கொண்டு ‘சி 17’ இராணுவப் போக்குவரத்து விமானம்ஒகாபூல் வான் தளத்தை விட்டுப் புறப்பட்டது என்ற தகவலை அமெரிக்கப் படை ஜெனரல் பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார்.

ஆப்கான் மண்ணை விட்டு இருபது ஆண்டுகளின் பின்னர் படைகள் முற்றாக வெளியேறியிருப்பதை தலிபான் தீவிரவாதிகள் ஆரவாரம் செய்து கொண்டாடி உள்ளனர். விமான நிலையத்தைச் சுற்றிவர உள்ள காவல் நிலைகளில் இருந்த ஆயுததாரிகள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துத் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்று அங்குள்ள ஏஎப்பி செய்தியாளர் கூறியிருக்கிறார்.

குமாரதாஸன். பாரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *