எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என்று வெனிசுவேலாவின் ஜனாதிபதி அறிவித்தார்.
உலகில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தமது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும்படி சமீபத்தில் வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதூரோ பகிரங்கமாகக் கேட்டிருந்தார். அதற்காகத் தான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாரென்றும் அறிவித்திருந்தார். அதையடுத்து நடந்த அரசியல் நகர்வுகளின் பின்னரே ஜனாதிபதி மதூரோவிடமிருந்து மேற்கண்ட அறிவிப்பு வந்திருக்கிறது.
வெனிசுவேலாவின் அதிகாரபூர்வமான ஜனாதிபதி என்று உலக நாடுகள் பலவற்றால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் யுவான் குவெய்டோவும் உடன்பட்டு மெக்ஸிகோவில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. அப்பேச்சுவார்த்தை தம் மீது அநியாயமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளாலும், நடவடிக்கைகளாலும் முறிந்ததாக நாட்டுக்கான தனது தொலைபேசி உரையில் ஜனாதிபதி மதூரோ தெரிவித்திருக்கிறார். நாட்டின் நிலைமையைச் சீர்செய்வதற்காக எல்லோரையும் சமமாக மதிக்கும் பேச்சுவார்த்தை தேவை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேற்கு ஆபிரிக்க நாடான கேப் வெர்டேயிலிருந்து கைதுசெய்யப்பட்ட அலெக்ஸ் சாப் என்ற வெனிசூலாவின் சோசியலிஸக் கட்சித் தலைவர் காரணமாகவே நடந்துவந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன. கடந்த ஒக்டோபர் மாதத்தில் அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அலெக்ஸ் சாப் வெனிசுவேலா அரசுக்காகக் கறுப்புப் பணத்தைக் கையாண்டு வருபவர் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்தது.
உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புக்காக ரஷ்யாவைத் தண்டிக்குமுகமாக அமெரிக்கா உலக நாடுகள் பலவற்றின் ஆதரவையும் கேட்டு நெருங்கி வருகிறது. ரஷ்யாவின் எரிபொருள் விற்பனைக்குத் தடை விதிக்கும் நோக்கத்துடன் மற்ற எண்ணெய் வள நாடுகளின் ஆதரவை அமெரிக்கா நாடி வருகிறது. அந்த நோக்கத்துடன் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் வெனிசுவேலாவுக்குப் பிரயாணம் செய்து ஜனாதிபதி மதூரோவிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள்.
ஜனாதிபதி மதூரோவின் மேற்கண்ட பேச்சுவார்த்தை அழைப்பு அமெரிக்க அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னரே வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு விலையாக அமெரிக்காவில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் தனது கட்சி நண்பர் அலெக்ஸ் சாப் விடுதலை செய்யப்படவேண்டும் என்று கோருகிறார் வெனிசுவேலாவின் ஜனாதிபதி.
வெனிசுவேலா, ரஷ்ய ஜனாதிபதியின் நீண்டகால நட்பு நாடாகும். ஐரோப்பாவில் போர் உண்டாவதைத் தடுக்கவேண்டும், நிலைமை மோசமடைய அனுமதிக்கலாகாது என்று கடந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்த ஜனாதிபதி மதூரோ, ரஷ்ய ஜனாதிபதி புத்தினுக்குத் தனது ஆதரவைக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயத்தில் அவர் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கும் போர் ஆபத்துக்குக் காரணமாக அமெரிக்காவையும், நாட்டோ அமைப்பையும் சாடியிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்