மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் உக்ரேன் நகர்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுகின்றனர்.
திங்களன்று ரஷ்யா அறிவித்திருந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்திருந்தது உக்ரேன். அதன் மூலம் பிரேரிக்கப்பட்ட மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் சாதாரண மக்கள் வெளியேறி பெலாரூசுக்கோ, ரஷ்யாவுக்கோ தான் அனுப்பப்படுவார்கள் என்பதே அதன் காரணமாக இருந்தது. பிரென்ச் அரசின் வேண்டுகோளுக்கிணங்கள் அந்த நகர்வை ரஷ்யா செய்திருந்தது என்ற செய்தியை பிரான்ஸ் அதிபர் அடிக்கோடிட்டு மறுத்தும் இருந்தார். அதையடுத்து செவ்வாயன்று காலை ரஷ்யா மீண்டும் பிரேரித்திருந்த மனிதாபிமான ஒழுங்கைகளும், போர் நிறுத்தமும் உக்ரேனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
உக்ரேனின் சிறு நகரங்களான சுமி, இர்ப்பின் ஆகிய நகரங்களிலிருந்து செவ்வாயன்று காலையில் சாதாரண மக்கள், பெரும்பாலும் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் தத்தம் வாகனங்களில் வெளியேற ஆரம்பித்திருப்பதாக உக்ரேனிலிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. அவர்கள் குறிப்பிட்ட நகரிலிருந்து உக்ரேனின் தெற்கிலிருக்கும் மேலுமொரு முக்கிய நகரமான போல்ட்டாவாவை நோக்கி வாகன அணியாக வெளியேறி வருகிறார்கள்.
துறைமுக நகரான மரியபோலை ரஷ்யா ஓரிரு நாட்களுக்கு முன்னர் தாக்கிய பின்னரும் இதே போன்ற ஒரு மனிதாபிமான ஒழுங்கையை உண்டாக்கி அதன் மூலம் சாதாரணமான, பலவீனமான மக்களை வெளியேற்றலாம் என்று அறிவித்தது. ஆனால், அவர்கள் வெளியேற ஆரம்பித்த பின்னரும் ரஷ்யா தாக்குதலை நிறுத்தாமலிருக்கவே வெளியேறிய சில பெண்களும் குழந்தைகளும் இறந்ததாக உக்ரேன் குற்றஞ்சாட்டியிருந்தது. அதனால், செவ்வாயன்றும் வெளியேறி வருபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இல்லை என்று தெரிகிறது.
ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கையின் இரட்டை மடங்கானோர் பாதுகாப்பான இடங்களை நோக்கிப் புலம் பெயரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு எச்சரித்திருக்கிறது. சுமார் இரண்டு மில்லியன் பேர் உக்ரேனை விட்டு வெளியேறிப் பக்கத்து நாடுகளை நாடலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்