உக்ரேன் துறைமுகத்திலிருந்து தானியங்களுடன் பயணித்த கப்பல் எங்கேயென்று தெரியாமல் மறைந்துவிட்டது.

நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் சர்வதேச அளவிலான உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு உக்ரேனைத் தனது தானியங்களைக் கப்பலின் மூலம் ஏற்றுமதி செய்ய அனுமதித்தது. துருக்கியின் தலையீட்டால் தீர்க்கப்பட்ட இப்பிரச்சினையின் முதல் வெற்றியாக உக்ரேனின் கருங்கடல் துறைமுகத்திலிருந்து தானியக் கப்பல்கள் ஒவ்வொன்றாகப் புறப்பட்டு வெவ்வேறு நாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.

முதன் முதலாக தானியங்களைச் சுமந்துகொண்டு புறப்பட்ட கப்பல் லெபனானை அடைந்ததாகச் செய்திகள் வந்திருந்தன. ஆனால், அத்தானியங்கள் குறிப்பிட்ட நேர அட்டவணைப்படி வாங்கியவர்களை அடையவில்லை என்பதால் எவரும் பொறுப்பெடுக்காமல்  இருந்ததாகச் செய்திகள் வெளியாயின. அக்கப்பல் அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேறொரு நாட்டுக்குச் செல்வதாகக் குறிப்பிடப்பட்டது.

குறிப்பிட்ட தானியக் கப்பல் சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர் திடீரென்று கண்காணிப்பு இயந்திரங்களிடமிருந்து காணாமல் போய்விட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அக்கப்பல் கடைசியாக சைப்பிரஸை அடுத்துப் பயணம் செய்வதைக் கண்காணிப்புக் கருவிகள் காணக்கூடியதாக இருந்தது. 

குறிப்பிட்ட கப்பல் சிரியாவை நோக்கிப் பயணமாகிக்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. சிரியாவும்,  ரஷ்யாவும் நட்பு நாடுகளாக இருப்பதால் குறிப்பிட்ட கப்பல் தனது பாதையை மறைப்பதற்காகக் கண்காணிப்புக் கருவிகளுக்குத் தன்னைக் காணாமல் செய்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *