விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன்|யூரி ககாரின் பிறந்தது இன்று தான்| மார்ச் 09
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர், சோவியத் ரஷ்யாவின் விண்வெளி வீரர் பிறந்தது இன்றைய நாள் மார்ச் மாதம் 9 ம்திகதி.
அவர் ஏப்ரல் மாதம் 12, 1961ஆம் ஆண்டு தேதியன்றுதான் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆனார்.
இது விண்வெளித்துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் அமெரிக்காவுடனான சோவியத் ரஷ்ய ஒன்றியத்தின் வெற்றியாகும். அவர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, இந்த வெற்றியை மறுக்க முடியாததாக மாற்றியது.
ககாரின், மிகுந்த துணிச்சலுடன், வரலாற்றை உருவாக்க ஒரு ஆபத்தான சவாலை ஏற்றுக்கொண்டார். விண்வெளி பயணம் குறித்து மனிதகுலத்துக்கு மிக குறைந்த அளவே புரிதல் இருந்த காலக்கட்டத்தில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார்.
கூடுதலான தகவல் என்னவென்றால், ககாரின் பயணித்த விண்கலத்தில் பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், அவரது உயிரை காப்பாற்றக்கூடிய எவ்வித அவசர மீட்பு அமைப்பும் அப்போது இருக்கவில்லை என்பதுதான்.
ஆபத்தை எதிர்த்து போரிட்ட ககாரின்
ககாரினை சுமந்துச் சென்ற ஏவூர்தி (ராக்கெட்) அதற்கு முன்பு பல முறை, சோதனைகளின்போது தோல்வியடைந்துள்ளது. இதுபோன்ற ஆபத்து நிறைந்த பயணத்தில் அவரை ஈடுபடுத்தியபோது, பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
அதாவது, மனிதர்கள் விண்வெளியில் வாழ முடியுமா? ஒரு விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கே பயணிக்க முடியுமா? விண்கலம் பூமியுடன் தொடர்பில் இருக்குமா? விண்கலம் பாதுகாப்பாக திரும்புமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு யூரி ககாரினின் இந்த பயணம் பதிலளித்தது.
ஏனெனில், அந்த காலக்கட்டத்தில் ஏவூர்தி, விண்கலம், தகவல் தொடர்பு கருவிகள் உள்ளிட்டவற்றில் மக்களுக்கு அந்தளவுக்கு நம்பிக்கை இல்லை. மனிதர்களால் விண்வெளியில் வாழ முடியுமா என்பது குறித்து நேரடியான பதில்களும் அப்போதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இந்த பயணத்துக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பொறியாளர் போரிஸ் செர்டோக் ‘ராக்கெட்ஸ் அண்ட் பீப்பிள்’ என்ற புத்தகத்தில், “வோஸ்டாக் விண்கலத்தை இன்றைய விஞ்ஞானிகளின் முன் வைத்தால், யாரும் இந்த பயணத்துக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் நான் தான், ‘இந்த விண்கலத்தின் செயல்பாடு நன்றாக இருக்கிறது, இந்த பயணம் பாதுகாப்பானது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்று கூறி ஆவணங்களில் கையெழுத்திட்டேன். ஆனால், இன்று நான் அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டேன். ஏனெனில், இந்த முதல் பயணத்துக்கு பிறகுதான் அதில் நிறைந்திருந்த ஆபத்துகள் குறித்து அனுபவத்தின் வாயிலாக எங்களுக்கு தெரியவந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர் தோல்விகளை சந்தித்த விண்கலத்தில் பயணம்
வோஸ்டாக் விண்கலத்தை விண்வெளிக்கு கொண்டுச்செல்லும் பணியை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 செய்யும் என்று முடிசெய்யப்பட்டிருந்தது. இதைத்தான் ஏவூர்தியாக கொண்டு ஆகஸ்ட், 1957ஆம் ஆண்டு உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் -1 விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இருப்பினும், 1961இல் இது நம்பத்தகுந்த ஏவூர்தியாக இருக்கவில்லை. இதுதொடர்பாக செர்டோக் தனது புத்தகத்தில், “ஒரு ஏவூர்திக்கான நவீனகால தர கட்டுப்பாட்டுடன் ஒப்பிட்டு பார்த்தோமானால், இந்த பயணம் சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில், 1960ஆம் ஆண்டு இந்த ஏவூர்தியை ஐந்து முறை பரிசோதித்ததில், நான்கு முறை இது தோல்வியுற்றது. ஆனால் 1961ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறைந்தது எட்டு முறை வெற்றிபெற்றது” என்று எழுதியுள்ளார்.
வோஸ்டாக் விண்கலம் முதன் முதலாக மே 15, 1960ஆம் ஆண்டு ஏவப்பட்டபோது தோல்வியடைந்த நிலையில், அடுத்த ஒரே ஆண்டுகாலத்தில் யூரி ககாரினின் விண்வெளி பயணத்திற்கு அது பயன்படுத்தப்பட்டது.
முன்னதாக, 1960ஆம் ஆண்டு ஆகஸ்டு 19ஆம் தேதி பரிசோதிக்கப்பட்டபோது, விண்கலத்தில் பெல்கா மற்றும் ஸ்ட்ரெல்கா என்ற இரு நாய்களும் அனுப்பப்பட்டு அவை பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வந்தன.
அதாவது, 1960ஆம் ஆண்டு இந்த விண்கலத்தை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த முயற்சி மட்டுமே வெற்றிப்பெற்றிருந்தது.
அதே ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, முஷ்கா மற்றும் பெச்செல்கா ஆகிய இரு நாய்கள் அனுப்பப்பட்டன. அந்த விண்கலம் தனது திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகி ரஷ்யாவிற்கு வெளியே சென்றதால், அதை வெடிக்கச் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில், இந்த விண்கலம் வேறெதாவது நாட்டின் நிலப்பகுதியில் விழும் நிலையில், தனது தொழில்நுட்ப ரகசியம் பறிபோய்விடும் என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ககாரின் பயணித்த விண்கலம்
ககாரினின் பயணம் தொடங்கிய ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்னர் அதே 1961ஆம் ஆண்டு அந்த விண்கலம் இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. எனினும், ககாரின் தனது பயணத்தை தொடங்கும்போது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பதற்றமே நிலவியது.
இந்த காலகட்டத்தில் பல தொழில்நுட்ப குறைபாடுகள் விண்கலத்தில் கண்டறியப்பட்டன. இதன் காரணமாக, விண்கலம் எதிர்பார்த்ததை விட அதிக உயரத்தில் வேறுபட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
வோஸ்டாக் விண்கலத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் தாக்குப்பிடிக்கக்கூடிய அளவுக்கு ஆக்ஸிஜன், உணவு மற்றும் நீர் இருப்பில் இருந்தது. ஆனால், விண்கலம் திட்டமிடப்பட்டதை விட அதிக உயரத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அவர் பூமிக்கு திரும்புவதற்கு கூடுதல் நேரம் ஆகும் என்று கருதப்பட்டது.
முற்றிலும் மாறிய ககாரினின் வாழ்க்கை
விவசாயிகளின் மகனான யூரி ககாரின் குறித்து அவர் விண்வெளி பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு வரை பலருக்கும் தெரியாது. ஆனால், அவர் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பி வந்ததும், உலகம் முழுவதும் அவர் பிரபலமானதுடன், ரஷ்யாவின் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
பூமிக்கு திரும்பிய பின்னர், தனது நற்பெயரை பயன்படுத்தி சோவியத் ஒன்றியத்தின் பெயரை உலக அரங்கில் உயர்த்துவதற்காக அவர் செக்கோஸ்லோவாக்கியா, பல்கேரியா, பின்லாந்து, பிரிட்டன், ஐஸ்லாந்து, கியூபா, பிரேசில், கனடா, ஹங்கேரி, இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணித்தார்.
இதுதொடர்பாக கடந்த 2011ஆம் ஆண்டு பிபிசியிடம் பேசிய யூரி ககாரினின் மகள் எலெனா ககாரினா, “எங்கள் வாழ்க்கை அப்போதுமுதல் தலைகீழாக மாறிவிட்டது. எனது பெற்றோர் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்வது மிகவும் கடினமாக இருந்தது. வீட்டில் ஒருவருக்கொருவர் நேரம் செலவழிக்க மிகக் குறைந்த வாய்ப்பே இருந்தது. எனது பெற்றோர் தனிப்பட்ட திட்டத்துடன் எங்காவது சென்றால், அவர்களை சந்திக்க மக்கள் கூட்டம் திரளும். எல்லோரும் அவர்களுடன் பேசவும் அவர்களைத் தொடவும் விரும்பினர். தங்களது பணி மற்றும் அதன் தேவையை புரிந்துகொண்ட அவர்களால், இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க முடியவில்லை” என்று கூறினார்.
ககாரின் தனது முதல் விண்வெளி பயணத்திற்கு பிறகு மீண்டும் விண்வெளி செல்ல விருப்பம் தெரிவித்தாலும் அவர் நாட்டில் பிரபலமான நபராக விளங்கியதால், பாதுகாப்பு கருதி வாய்ப்பளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், மற்ற விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து, அவர் புகழ்பெற்ற ஜோகோவ்ஸ்கி இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் மையத்திற்கு பயிற்சி பெறுவதற்காக சென்றார்.
1968ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டம் பெற்ற அவர், அதே ஆண்டு மார்ச் மாதத்தில் மிக்-15 ரக விமானத்தை பரிசோதித்து கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் தனது சக விமானியுடன் அவரும் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 34 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
எழுதுவது : டொமினிக் ராஜ், தமிழ்நாடு.