சே குவேராவைச் சுட்டுக் கொண்ற பொலீவிய இராணுவ வீரர் சலஸார் 80 வயதில் மரணம்.
54 வருடங்களுக்கு முன்னர் பொலீவியாவின் காடுகளுக்குள் ஒளிந்திருந்த சே குவேராவைக் கைது செய்த இராணுவ வீரர்களில் ஒருவர் மாரியோ தெரான் சலஸார் ஆகும். மோதலில் காயப்பட்டிருந்த சே குவேராவைப் பாழடைந்த பாடசாலைக் கட்டடம் ஒன்றுக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கே சலஸார் அன்றைய பொலீவிய ஜனாதிபதி ரெனே பரெண்டோஸின் உத்தரவின் பேரில் சே குவேராவைச் சுட்டுக் கொன்றார்.
“அது எனது வாழ்க்கையில் மோசமான ஒரு நாள். ஒளிரும் கண்களுடன் சே எனக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்திருந்ததாக உணர்ந்தேன். எந்தக் கணத்திலும் சே என்னிடமிருந்த துப்பாக்கியைப் பறித்துவிடலாம் என்று தோன்றியது,“ என்று அந்தச் சம்பவத்தை சலஸார் விபரித்திருந்தார்.
“நிதானமாக உன் துப்பாக்கியை எடுத்துச் சரியாகக் குறிப்பார்த்துச் சுடு, நீ ஒரு ஆண்மகனைச் சுடப்போகிறாய்,’ என்று சே என்னிடம் சொன்னார். நான் ஒரு அடி பின்னால் சென்று என் கண்களை மூடிக்கொண்டு அவரைச் சுட்டேன்,” என்று குறிப்பிட்ட சலஸார் அதன் பின்னர் 30 வருடம் இராணுவத்தில் பதவியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றார்.
தனது ஓய்வுக்குப் பின்னர் அவர் எங்கும் தலை காட்டவில்லை. பத்திரிகை நிருபர்களிடமிருந்து ஒதுங்கியிருந்தார். ஒரு சமயத்தில் சே குவேராவைக் கொன்றது தானல்ல, தன் பெயரைக் கொண்ட இன்னொரு இராணுவ வீரர் என்றும் சொல்லிவந்தார்.
ஆர்ஜென்ரீனாவில் பிறந்த சே குவேரா தனது மருத்துவப் படிப்புக்களை முடித்துவிட்டு பிடல் காஸ்ட்ரோவையும் அவரது சகோதரர் ராவுலையும் மெக்ஸிகோவில் சந்தித்திருந்தார். கெரில்லா போரின் மூலம் தென்னமெரிக்க நாடுகளிலும், முக்கியமாக கியூபாவிலும் மார்க்ஸிசப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ -யின் உதவியுடன் செயற்பட்ட இரண்டு கியூபா – அமெரிக்க உளவுகாரர்களுடன் சேர்ந்து செயற்பட்ட சலஸாரினால் கைதுசெய்யப்பட்டுத் தனது 39 வயதில் கொல்லப்பட்டார்.
புற்றுநோயால் சில வருடங்களாகவே பாதிக்கப்பட்டு மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சலஸார் வியாழனன்று இறந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்