உக்ரேனுக்கெதிராகப் போரிட சிரியாவில் ஆட்கள் தேடப்படுகிறார்கள், ரஷ்யாவால்.
உக்ரேனுக்குள் நுழைந்து இரண்டு வாரங்கள் கழிந்தும் ரஷ்யாவின் இராணுவத்தால் உக்ரேன் அரசைத் தாம் நினைத்தது போலப் பணியவைக்க முடியவில்லை. இரண்டு பக்கப் போர்களத்துச் செய்திகளையும் முழுக்க நம்ப முடியாவிடினும் ரஷ்யா இராணுவம் எதிர்பார்த்ததை விடப் பலமான எதிர்ப்பை நேரிடுகிறது என்பதும், இறப்புக்களும் இழப்புக்களும் ரஷ்யாவின் பகுதியிலும் அதிகமாகவே இருப்பதாகவே தெரியவருகிறது.
ரஷ்யா தனது நாட்டு இராணுவத்தினர் அதிகளவில் போரில் இறப்பார்களானால் அது நாட்டு மக்களிடையே உக்ரேன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்துக்களை உண்டாகிவிடும் என்று அஞ்சுகிறது. எனவே, தமது ஆதரவாளர்களான சிரியா அரசின் உதவியுடன் சிரிய நாட்டவர்களை போருக்கு உதவும்படி அழைக்கிறது. சுமார் 16,000 பேர் அங்கிருந்து தமக்காகப் போரிட உக்ரேனில் போரிடத் தயாராக இருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருக்கிறார்.
சிரியாவிலிருந்து வரும் செய்திகளின்படி அந்த நாட்டின் இராணுவத்தின் ஆள் சேர்க்கும் பகுதியொன்றில் ரஷ்யாவில் போரிடச் செல்பவர்களுக்கு 3,000 டொலர் சன்மானம் தருவதாக விளம்பரம் வந்திருக்கிறது. அந்தத் தொகை மாதச் சம்பளமா அல்லது போருக்குச் செல்வதற்கான முழுச் சன்மானமா என்பது குறிப்பிடப்படவில்லை. உக்ரேனுக்குள் ஏற்கனவே சிரியர்களின் வாடகை இராணுவமும் செயற்படுவதாகக் குறிப்பிடப்பட்டாலும், ஊர்ஜிதப்படுத்தக்கூடியதாக இல்லை.
சிரியாவின் சர்வாதிகார அதிபர் ஆசாத் ஆயுதமேந்தக்கூடிய தனது நாட்டினர் பலர் வாடகை இராணுவமாக ரஷ்யாவால் உக்ரேனுக்குள் பாவிக்கப்பட எந்த அளவுக்கு அனுமதிக்கக்கூடும் என்பது கேள்விக்குறியே. தன்னை ஆட்சியிலிருந்து புரட்டக் கிளம்பிய பல எதிரணியினரை ஒடுக்க அல்-ஆஸாத்துக்கு ரஷ்யாவின் இராணுவமே உதவியது. உக்ரேனுக்குள் போர் புரிவதற்காக ரஷ்ய ராணுவத்தின் பெரும்பகுதியுடன், தனக்கு ஆதரவான சிரியர்களும் போய்விட்டால் தோல்வியடைந்த எதிரணியினர் சமயம் பார்த்து மீண்டும் சிரியாவுக்குள் தலைதூக்கினால் என்னாவது எனபது அல் – ஆஸாத்தின் தடுமாற்றமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்