ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை நிராகரித்து வருகிறார்கள் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் தலைவர்கள்!

சவூதி அரேபியா, எமிரேட்ஸ் நாட்டின் அரசர்கள் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்று அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் பின்னணி ஈரானுடனான அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தம் வெற்றிகரமாகத் தொடருதல், சவூதி அரேபியா, எமிரேட்ஸ் மீதான ஹுத்தி இயக்கத்தினரின் தாக்குதல்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஐ.ந-வின் பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர நாடுகளும், ஜேர்மனியும் சேர்ந்து ஈரானுடன் சேர்ந்து கைச்சாத்திடவிருக்கும் அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தம் சவூதி அரேபியா மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பற்றிய சஞ்சலங்களைத் தீர்த்து வைக்கவில்லை என்று கருதுகிறார்கள் அந்த நாட்டின் அரசர்கள். குறிப்பிட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் ஈரான் சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் ஈடுபடுவதுடன் தன்னை மீண்டும் பலப்படுத்திக்கொள்ளவும் முடியும் என்று அஞ்சுகிறார்கள் சவூதி அரேபியாவின் முஹம்மது பின் சல்மான், எமிரேட்ஸின் முஹம்மது பின் சாயது அல் நஹ்யான் ஆகியோர்.

ரஷ்யா – உக்ரேன் மீது செய்திருக்கும் ஆக்கிரமிப்புக்காக ரஷ்யாவைத் தண்டிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் பொருளாதாரத் தொப்புள்கொடியை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. விளைவாக சர்வதேசச் சந்தையில் பெற்றோலியத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கட்டுகடங்காமல் ஏறிக்கொண்டிருக்கிறது.

இச்சமயத்தில் ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்குத் தேவையான எரிசக்தியைப் பெற மத்திய கிழக்கின் முக்கிய எரிபொருள் ஏற்றுமதியாளர்களான சவூதி அரேபியா, எமிரேட்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பு அதிகரிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியான அமெரிக்க வேண்டுகோளை சவூதி அரேபியா ஏற்கவில்லை. புதனன்று அதே வேண்டுகோள் ஜேர்மனியப் பிரதமரிடமிருந்தும் எழுப்பப்பட்டிருக்கிறது.

ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்திலிருந்தே சவூதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவுகளில் உறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அதிருப்தி அடைந்திருக்கும் சவூதியப் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ஜோ பைடன் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. அவர் அமெரிக்காவின் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்துவது பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. அதே போன்று அவரும் என் நிலைப்பாட்டை விமர்சிக்க முடியாது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

சவூதி அரேபியாவும் தனது சொந்த அணுசக்திப் பரிசோதனையை விரிவாக்கிக்கொள்ள விரும்புகிறது. அதற்காக அமெரிக்காவின் ஆதரவையும் எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *